தமிழ்நாடு

கொரோனா தடுப்பூசிக்கான ஒப்புதல் - ஏற்புப் படிவத்தில் கோவாக்சின் குறித்து இருப்பது என்ன?

கொரோனா தடுப்பூசிக்கான ஒப்புதல் - ஏற்புப் படிவத்தில் கோவாக்சின் குறித்து இருப்பது என்ன?

webteam

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்கியது. அதன்படி, தமிழகத்தில் 166 இடங்களில் சுகாதாரப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதில் 160 இடங்களில் கோவிஷீல்டு மருந்துகளும், 6 இடங்களில் கோவாக்சினும் வழங்கப்படுகிறது.

கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய இரு தடுப்பூசிகளுக்கும் அவசரகால அனுமதி தரப்பட்டுள்ள நிலையில், அவை முதல் கட்டமாக 3 கோடி முன்கள பணியாளர்களுக்கு இலவசமாக போடப்படுகிறது. இதில், பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின் (COVAXIN) தடுப்பு மருந்தின் பாதுகாப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்த தெளிவான தரவுகள் இதுவரை பதிவாகவில்லை. குறிப்பாக மருந்தின் செயல்பாடு குறித்த மூன்றாம் கட்ட பரிசோதனை முழுமை பெறாமல் உள்ளது.

சோதனை முயற்சியில் முழுமை பெறாத மருந்தை ஏன் வாங்க வேண்டுமென மருத்துவ வல்லுனர்களும், சுகாதாரத்துறை சார்ந்த வல்லுனர்களும் கேள்வி எழுப்பியுள்ளனர். எதிர்க்கட்சிகளும் கடும் விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர். எனினும், இது பாதுகாப்பானதுதான் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உறுதிபட தெரிவித்துள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரையில், இன்று 160 இடங்களில் கோவிஷீல்டு மருந்துகளும், 6 இடங்களில் கோவாக்சினும் வழங்கப்படுகிறது. தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கான ஒப்புதல் - ஏற்புப் படிவத்தில் கோவாக்சின் குறித்து இடம்பெற்றுள்ள அம்சம்:

கோவிட் தடுப்பு மருந்தான கோவாக்சின் அவசரகால அடிப்படையில் குடும்பநலன் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகத்தால் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு பூத்தில் கோவாக்சின் தடுப்பூசி வழங்கப்படுகிறது. பாரத் பயோடெக் நிறுவனத்தின் இந்த கோவாக்சின் தடுப்பூசிக்கு எமெர்ஜென்சி அடிப்படையில் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

இரண்டு கட்டமாக செலுத்தப்படும் இந்த தடுப்பூசி மருத்துவ பரிசோதனைகளுக்கானது. கோவாக்சின் கோவிட் 19-க்கு எதிராக ஆன்டிபாடிகளை உருவாக்கும் திறனை நிரூபித்துள்ளது. இருப்பினும் கோவாக்சினின் மருத்துவ செயல்திறன் நிறுவப்பட வேண்டும். இது இன்னும் 3 ஆம் கட்ட மருத்துவ பாதையில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. எனவே, தடுப்பூசி பெறுவது என்பது கோவிட் 19 தொடர்பான பிற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என்று அர்த்தமல்ல.

அவசரகால சூழ்நிலையில் "ஏராளமான முன்னெச்சரிக்கை மற்றும் மருத்துவ சோதனை முறையில்" குறைந்த அளவு பயன்பாட்டிற்காக கோவாக்சின் விற்பனை அல்லது விநியோகத்திற்கு மத்திய உரிம ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்த தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகு ஏதேனும் பாதகமான நிகழ்வுகள் அல்லது கடுமையான பாதகமான நிகழ்வுகள் ஏற்பட்டால், அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மையங்கள் / மருத்துவமனைகளில் உங்களுக்கு மருத்துவ ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட தரமான பராமரிப்பு வழங்கப்படும்.

பாதகமான நிகழ்வுக்கான இழப்பீடு, ஸ்பான்சர் (பிபிஎல்) மூலம் செலுத்தப்படும். பாதகமான நிகழ்வு தடுப்பூசியுடன் தொடர்புடையது என நிரூபிக்கப்பட்டால் மட்டுமே இழப்பீடு செலுத்தப்படும்.

- இந்த விவரம் இடம்பெற்றுள்ள படிவத்தில் கையெழுத்திட விருப்பம் இல்லாதவர்களுக்கு, தடுப்பூசி போடப்படாது என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

முன்னதாக, தடுப்பூசியை எவ்வாறு செலுத்துவது என்பது குறித்து மருத்துவர்கள், செவிலியருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தடுப்பூசி மருந்து பாட்டிலிலும் 5 மில்லி லிட்டர் மருந்து இருக்கும். அதில், ஒவ்வொருவருக்கும் 0.5 மில்லி என்ற அளவில் 10 பேருக்கு தடுப்புமருந்து செலுத்தப்படுகிறது.

தடுப்பூசி போடுவதற்கான சிரின்ஜுகள் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, குணமடைந்தவர்களும் தடுப்பூசி போட்டுகொள்ளலாம் என்றாலும், பாதிக்கப்பட்ட 14 நாட்களுக்குள் தடுப்பூசியை பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.