தமிழ்நாடு

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்யும் வரை அதிகாரிகள் என்ன செய்தார்கள்? - நீதிபதிகள் கேள்வி

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்யும் வரை அதிகாரிகள் என்ன செய்தார்கள்? - நீதிபதிகள் கேள்வி

kaleelrahman

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் போராட்டம் நடத்தினால் அதிகாரிகள் திரும்பி வந்து விடுவார்களா? நிலத்தை ஆக்கிரமிப்பு செய்யும் வரை அதிகாரிகள் என்ன செய்தார்கள்? கடமை தவறிய அதிகாரி மீது என்ன நடவடிக்கை எடுப்பது? என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது. 

கரூரில் அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி கரூர் மாவட்டத்தை சேர்ந்த இளங்கோவன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில், கரூர் மாவட்டம் தாந்தோணி கிராமம் அருகே உள்ள பாலாஜி நகர் பகுதியில் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த புறம்போக்கு நிலத்தில் ஓடை மற்றும் வாய்க்கால் அமைந்துள்ளது.

மழைக்காலங்களில் மழை தண்ணீர் குடியிருப்பு பகுதியில் தேங்காமல் ஓடை வாய்க்கால் வழியாக சென்று வருகிறது. தற்போது ஓடை மற்றும் வாய்க்காலை சிலர் முள் வேலிகள் அமைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். மேலும் அப்பகுதியில் பல மரக்கன்றுகளையும் வைத்துள்ளனர், இப்பகுதிக்கு யாரும் செல்ல முடியாத அளவுக்கு இரும்புக் கதவு அமைத்துள்ளனர்.

இதுகுறித்து கரூர், தாசில்தார், மாநகராட்சி ஆணையர், மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு புகைப்படங்களுடன் கூடிய மனு செய்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஓடை மற்றும் வாய்க்காலை ஆக்கிரமிப்பு செய்வதால் மழைக்காலங்களில் குடியிருப்பு பகுதியில் தண்ணீர் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு, "ஒரு வருடமாக அரசு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. ஏன் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? என கேள்வி எழுப்பினர். இதற்கு அரசு தரப்பில் ஆக்கிரமிப்பு குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகள் சென்றால் ஆக்கிரமிப்பாளர்கள் மக்களை திரட்டி போராட்டம் நடத்துவதாக தெரிவித்தனர்.

அதற்கு நீதிபதிகள், "அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து போராட்டம் நடத்தினால் அதிகாரிகள் திரும்பி வந்து விடுவார்களா? நிலத்தை ஆக்கிரமிப்பு செய்யும் வரை அதிகாரிகள் என்ன செய்தார்கள்? கடமை தவறிய அதிகாரி மீது என்ன நடவடிக்கை எடுப்பது? என கேள்வி எழுப்பினர்.

மேலும் நிலத்தை உடனடியாக அளவீடு செய்து உரிய நடவடிக்கை எடுத்து கரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.