ஃபெஞ்சல் புயல் தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் தனது தடத்தை பதித்துச் சென்றுவிட்டது. தவிர, கர்நாடகம், கேரளா என அண்டை மாநிலங்களிலும் பலத்த மழையை கொடுத்து சென்றுவிட்டது.
இந்த புயல் நமக்கு கற்றுக்கொடுத்திருப்பதை கொஞ்சம் திரும்பிப்பார்க்கலாம்.
முதலில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக இருந்தபோது சென்னை, நாகை இடையே புயலாக கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டது. அதன் பிறகு வலுவிழந்த நிலையில் கரையை கடக்கும் என்றும், புயலாக கடலில் உருவாகி கரை கடக்கும் முன்னரே வலுவிழக்கும் என்றும் கணிக்கப்பட்டது.
ஆனால், இலங்கை அருகே வந்தபோது அதன் தீவிரம் குறைந்தது. ஆகவே இது புயலாகக் கூட உருவாக வாய்ப்பில்லை என்று எதிர்பார்க்கப்பட்டது.
எதிர்பாரா விதமாக, இந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தீவிரமான புயலாக மாறி மரக்காணம் அருகே கரையை கடந்ததோடு, விழுப்புரம், கடலுர், புதுச்சேரி என ஆட்டிப் படைத்துவிட்டது.
இந்த புயல் கணிக்க முடியாததாக மாறியதா? அல்லது கணிக்கத்தவறிய புயலாக மாறியதா என்ற கேள்விகள் எழுகின்றன.
ஃபெஞ்சல் புயல் இவ்வளவு மழை தரும் என்பது முதலில் கணிக்க முடியாமல் அத்தனை வானிலை ஆய்வாளர்களையும் திணற வைத்துவிட்டது.
அதிகனமழை என்பதற்கும் மேலாக அதீத பெருமழையாக கொட்டித்தீர்த்த இந்த ஃபெஞ்சல் புயல் மழையைப் போல, உலகம் முழுவதுமே மழை பதிவை காண முடிகிறது. வளர்ந்த நாடுகளோ, வளரும் நாடுகளோ, வறுமை மிக்க நாடுகளோ எந்த பாகுபாடும் இல்லாமல் மழை, வெள்ளம் அதீதமாக இருக்கிறது.
இதற்கு காலநிலை மாற்றமும் முக்கிய காரணமாக சுட்டிக்காட்டப்படுகிறது. கடல் வெப்பம் உயர்வதன் காரணமாக இனி வரும் புயல், மழைகள், பருவமழைக்காலங்களை இப்படித்தான் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை ஃபெஞ்சல் புயல் உணர்த்திச்சென்றுள்ளது.