டிடிவி தினகரன் கோப்புப்படம்
தமிழ்நாடு

அதிருப்தியில் அமமுக தொண்டர்கள்.. கூட்டணியில் நீடிப்பாரா? விஜயின் கதவை திறப்பாரா? டிடிவி தினகரன்!

மீண்டும் அதிமுக பாஜக கூட்டணி ஏற்பட்டதால் டிடிவி தினகரன் முக்கியத்துவத்தை இழந்துவிட்டதாகவும், எந்த கட்சி நிகழ்வுக்கும் அழைக்கப்படாமல் புறக்கணிக்கப்படுவதாகவும் அமமுக தொண்டர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

PT WEB

தேசிய ஜனநாயக கூட்டணியில் டிடிவி தினகரனுக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை என்று அமமுக தொண்டர்கள் அதிருப்தியில் இருப்பதாகவும், ஓபிஎஸை தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து டிடிவி தினகரனும் வெளியேறுவாரா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

செய்தியாளர் - சந்தான குமார்

அதிமுகவை எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து மீட்க வேண்டும் என்ற நோக்கில் ஜெயலலிதா மறைவிற்கு பின் அமமுக என்ற கட்சியை தொடங்கினார் டி.டி.வி.தினகரன், கட்சியின் பொதுசெயலாளர் பதவியை அவர் வைத்துக்கொள்ள தலைவர் பதவி சசிகலாவுக்கு என கூறினார். ஆனால் சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலா அமமுகவில் இணையவில்லை.

2021 சட்டமன்ற தேர்தலில் தேமுதிக, எஸ்.டி. பி.ஐ உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட அமமுக 2.35% வாக்குகளை பெற்றது. ஒரு சீட்டில் கூட வெற்றி பெற முடியவில்லை என்றாலும் கூட அதிமுக பாஜக கூட்டணியின் வெற்றி 20 தொகுதிகளில் அமமுக வால் பறிபோனது.

அதிருப்தியில் அமமுக தொண்டர்கள்..

2021 சட்டமன்ற தேர்தல் முடிவுக்கு பின் டி.டி.வி.தினகரனை கட்சியில் இணைத்து கொள்ளவில்லை என்றாலும் கூட்டணியாக வைத்துக்கொண்டால் வெற்றி பெற உதவியாக இருக்கும் என தேசிய ஜனநாயக கூட்டணியில் பேச்சுகள் உருவான நேரத்தில்தான் அதிமுக - பாஜக கூட்டணி முறிவு ஏற்பட்டது.

2024 நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றது அமமுக. 2024 நாடாளுமன்ற தேர்தல் முடிவுக்கு பின் எடப்பாடி பழனிசாமி பின்னால் இருக்கும் அதிமுக தொண்டர்கள் அனைவரும் டி.டி.வி.தினகரன் பின்னால் இருப்பார்கள் அதிமுக டி.டி.வி.தினகரன் கையுக்கு திரும்பி வரும் என தேனி தொகுதியில் பிரச்சாரம் செய்தார் அப்போதைய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நாடாளுமன்ற தேர்தலில் எந்த ஒரு சீட் பேரம் நடத்தாமல் 2 சீட்டை மட்டுமே பெற்றார் டி.டி.வி.தினகரன்.

டிடிவி தினகரன்

அதன் பின் தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக பேசி வருகிறார் டி.டி.வி.தினகரன், எந்த எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து கட்சி தொடங்கினாரோ அதே கட்சியுடன் பாஜக கூட்டணி வைத்த நேரத்திலும் அதனை வரவேற்றார் டி.டி.வி.தினகரன், இன்னும் ஒரு படி மேல் சென்று சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரை அதிமுக தான் பெரிய கட்சி அவர்கள் தலைமையில்தான் கூட்டணி என்றாலும் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை அமித்ஷா முடிவு செய்வார் என செக் வைத்தார் டி.டி.வி.தினகரன்.

2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி ஆட்சி என அமித்ஷா குரலுக்கு கூடவே சேர்ந்து பலு சேர்க்கும் வகையில் கூட்டணி ஆட்சிதான் என பேசினார் டி.டி.வி.தினகரன்,இப்படி பாஜகவின் கருத்துக்களை தொடர்ந்து எதிரொலித்து வந்த டி.டி.வி. தினகரனைதான் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என அமமுக தொண்டர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

தொடர்ந்து புறக்கணிக்கப்படும் டிடிவி தினகரன்..

அதிமுக பாஜக கூட்டணி அமைந்த பின் தமிழகத்திற்கு வந்த பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவை சந்திக்க ஓபிஎஸ் மற்றும் டி.டி.வி.தினகரனுக்கு நேரம் வழங்கப்படவில்லை. அதேபோல தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறும் எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் ஓபிஎஸ் மற்றும் டி.டி.வி.தினகரணுக்கு அழைப்பு விடுக்கப்படாமல் உள்ளது. இதனை தொடர்ந்து தான் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார் ஓபிஎஸ், அப்போது பேசிய டி.டி.வி.தினகரன் ஓபிஎஸ் இந்த முடிவை எடுத்தது எனக்கு வருத்தம், இந்த முடிவுக்கு அவர் தள்ளப்பட்டு இருக்க கூடாது எனவும் யார் காரணம் என POSTMODERM செய்ய விரும்பவில்லை மீண்டும் ஓபிஎஸ் இந்த கூட்டணிக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசினார்.

அதன் பின் சமீபத்தில் நடைபெற்ற ஜான்பாண்டியன் உடைய பொன்விழா கொண்டாட்டங்கள் நடைபெற்றது. தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள அனைத்து தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் டி.டி.வி.தினகரன் அழைக்கப்படவில்லை.

நேற்று நடைபெற்ற மூப்பனார் நினைவு நாளில் தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த அனைத்து தலைவர்களும் பங்கேற்ற நிலையில் டிடிவி தினகரனுக்கு அழைப்பு இல்லை, கூட்டணியில் இல்லாத தேமுதிகவுக்கு கூட அழைப்பு இருந்தது. இதனால் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என தொடர்ச்சியாக சமூக வலைதளங்கள் பக்கங்களில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைமை கழக நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரும் வலியுறுத்தி வருகின்றனர்.

குறிப்பாக தேசிய ஜனநாயக கூட்டணியில் டி.டி.வி.தினகரன் மற்றும் ஓபிஎஸ்க்கு முக்கிய ஆதரவு குரலாக இருந்த முன்னாள் பாஜக மாநிலத்தலைவர், தற்போது எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்க வேண்டும் என பேச தொடங்கியுள்ளது டிடிவி தினகரனுக்கு புதிய நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

டிடிவி தினகரன்

இதை எல்லாம் மனதில் வைத்தே 2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவார் என அந்த கதவை டி.டி.வி. தினகரன் திறந்து வைத்துள்ளார் என்றும் நிர்வாகிகளின் கருத்துகளை டிடிவி தினகரன் பரிசீலித்து வருவதாக சொல்லப்படுகிறது. என்ன முடிவை டிடிவி தினகரன் எடுக்கப்போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.