தமிழ்நாடு

யானைகளின் மர்ம மரணங்கள்... காரணம் என்ன? ஆய்வாளர்கள் கருத்து

யானைகளின் மர்ம மரணங்கள்... காரணம் என்ன? ஆய்வாளர்கள் கருத்து

webteam

கடந்த 8 மாதங்களில் தமிழகத்தில் இதுவரை 17 யானைகள் உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளது என்பது வன ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாகச் செல்லும் வழித்தடங்களில் மாற்றம் , மின்சார வேலிகள், உணவில் விஷம் கலத்தல் போன்ற காரணங்களால் யானைகள் உயிரிழப்பதாகத் தெரியவந்துள்ளது. இந்த நிலையில், யானைகள் ஏன் திடீரென உயிரிழக்கின்றன என்பது பற்றி சில யானை ஆய்வாளர்களிடம் பேசினோம்.

பிரவீன்குமார், யானை ஆய்வாளர்

இந்தியா முழுவதும் யானைகளின் வாழிடங்கள் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருகின்றன. மேற்குத்தொடர்ச்சி மலையில் 150 ஆண்டுகளுக்கு முன்புதான் தேயிலைத் தோட்டங்கள் உருவாக்கப்பட்டன. காடுகளுக்கு விவசாயம் வந்தபோது அதற்கான முதல் தடையும் வந்துவிட்டது. உணவுக்கான தேடலுடன் பல மைல்கள் காடுகளில் நகரக்கூடியவை யானைகள். தெற்கில் இருந்து வடக்கு நோக்கி செல்லக்கூடியவையாக இருந்துள்ளன. இன்று அந்த வழித்தடங்கள் துண்டுத்துண்டாக தடைபட்டுள்ளன.

பெரும்பாலான வழித்தடங்கள் அழிக்கப்பட்டுவிட்டன. கிழக்குத்தொடர்ச்சி மலையில் வாழிடங்களும் வழித்தடங்களும் குறைந்துவிட்டன. வழித்தடங்கள் தடைபட்டால் வாழிடங்களும் குறைந்துவிடும். ஜவ்வாது மலையில் ஒரு காலத்தில் நூற்றுக்கணக்கில் யானைகள் இருந்தன. இன்று அங்கே ஒரு யானை மட்டும் இருக்கிறது. சத்தியமங்கலம் காடுகள் வழியாகத்தான் அங்கே யானைகள் வரவேண்டும்.

நெடுஞ்சாலைகள், நகரப் பெருக்கும் ஆகியவற்றின் காரணமாக வழித்தடங்கள் காணாமல்போய்விட்டன. பன்றிகளுக்கு வைக்கப்படும் விஷத்தைச் சாப்பிடுவதாலும் யானைகள் பரிதாபமாக உயிரிழக்கின்றன. தந்தங்களுக்காக யானைகள் வேட்டையாடப்பட்டன. தற்போது அந்த வேட்டை குறைந்துள்ளது. தந்தங்களுக்காக ஆண் யானைகள்தான் கொல்லப்படுகின்றன. அதனால் ஆண் - பெண் விகிதம் அதலபாதாளத்தில் உள்ளது. ஓர் ஆண் யானைக்கு 24 பெண் யானைகள் இருப்பதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

ஓசூருக்கும் கிருஷ்ணகிரிக்கும் இடையிலான நெடுஞ்சாலைப் பகுதியில் சாணமாவு என்ற கிராமத்தில்தான் அதிகமாக யானைகள் சாலைகளைக் கடக்கும். அங்கே இயல்பாக நகர்ந்துவந்த யானைகளுக்கு தேசிய நெடுஞ்சாலை மாபெரும் தடையாக மாறிவிட்டது. இப்போது எப்படி கடந்துபோகமுடியும்? தங்களுக்குச் சொந்தமான பழக்கமான வழித்தடங்களை இழப்பதால், அவை ஊருக்குள் வருகின்றன. விவசாய நிலங்களுக்கு வருகின்றன.

நமக்கு கனிமவளம் தேவைப்படுகிறது. அதனால் காடுகள் அழிக்கப்படுகின்றன. மலைகள் வெட்டப்படுகின்றன. யானைகள் இருந்தால் அந்தப் பகுதி செழுமையாக இருக்கும். அவை அழிந்தால் காடுகள் அழியும். காடுகள் அழிந்தால் நீர்வளம் குறையும். அதைத்தொடர்ந்து விவசாயம் பறிபோகும். இதுதான் பல்லுயிர்ச்சூழல். எனவே பேருயிரான யானைகள் காப்பாற்றப்படவேண்டும். அவை பற்றிய விழிப்புணர்வும் மக்களுக்கு ஏற்படவேண்டும்.

ரவீந்திரன் நடராஜன், இயற்கை ஆர்வலர்

யானைகள் ஓர் இடத்தில் மட்டுமே இருக்கக்கூடியவை அல்ல. எப்போதும் உணவுக்காக 400 மைல் அளவுக்கு வலசை போகக்கூடியவையாக உள்ளன. பருவகாலங்களுக்கு ஏற்ப அவை இடம் மாறும். ஆற்றங்கரையோர காட்டுப்பகுதிகளில் யானைகளை அதிகம் பார்க்கலாம். எப்போதும் இல்லாத அளவுக்கு காடுகளில் மனிதர்களின் தாக்கத்தால் அவற்றின் வாழிடங்கள் கேள்விக்குறியாகி வருகின்றன.

காடுகளில் யானைகள் குடும்பமாக நகரும். மற்ற உயிரினங்களைப் போலவே தம் குழந்தைகளைப் பத்திரமாகவும் அக்கறையுடனும் பாதுகாக்கக்கூடியவை. அவை இயல்பாக வலசை வரக்கூடிய இடங்களில் மனிதர்கள் வந்துவிட்டார்கள். அடர்ந்த காட்டுப்பகுதிகள் குறைந்துவருகின்றன. மேலும் சமூகக் காடுகளும் அதிகமாகிவிட்டன. தைல மரங்கள் வளர்க்கப்படுகின்றன. புல்வெளிக்காடுகளும், சோலைக்காடுகளும் இல்லை.

நீரைத்தேடியும், உணவைத் தேடியும் கிராமங்களுக்குள் நுழைகின்றன யானைகள். அவற்றுக்குத் தேவையான உணவு விவசாய நிலங்களில் கிடைத்துவிடுகின்றன. முதலில் சுவைக்கத் தொடங்கும் யானைகள், மீண்டும் அந்த சுவையை நாடி வருகின்றன. அடுத்த தலைமுறைக்கும் அவை பழக்கப்படுத்துகின்றன. இன்று காட்டுக்குள் வாழைத் தோப்புகள் உள்ளன. மக்களால் காய்கறிகளும் வளர்க்கப்படுகின்றன.

மேலும், தற்போது காடுகளில் அயல்நாட்டுத் தாவரங்கள் பெருகிவருகின்றன. அந்த களைச்செடிகளின் பரவல் வேகம் அதிகமாகியுள்ளது. நம்முடைய இயற்கைத் தாவரங்கள் வளரமுடியாத நிலை இருக்கிறது. அதனால் காட்டுயிர்களுக்கு உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதை வனத்துறையினர் கவனத்தில்கொள்ளவேண்டும்.

பட்டாசுகளும், மனித நடமாட்டங்களும், வாகன இரைச்சலும். செல்பி எடுப்பதும் யானைகளுக்கு மன உளைச்சலைத் தருகின்றன. அதன் விளைவாகத்தான் யானைகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. காட்டுவழிச்சாலைகளில் இரவில் போக்குவரத்தை நிறுத்திவைக்கலாம். பகலில் மட்டும் பயன்படுத்த அனுமதி வழங்கலாம். இரவுகள்தான் காட்டுயிர்களுக்கு சுதந்தரமான நேரமாக இருக்கும். அதையும் நாம் பிடுங்கிக்கொண்டால் அவை எங்கே செல்லும்.