தமிழ்நாடு

மதுரையில் மேம்பாலம் இடிந்து விழ என்ன காரணம்? - அறிக்கை சொல்வது என்ன?

மதுரையில் மேம்பாலம் இடிந்து விழ என்ன காரணம்? - அறிக்கை சொல்வது என்ன?

கலிலுல்லா

மதுரையில் மேம்பாலம் இடிந்த விபத்திற்கான உண்மை காரணங்கள் குறித்த ஆய்வறிக்கையை தேசிய நெடுஞ்சாலை துறையிடம் தாக்கல் செய்துள்ள நிபுணர் குழு, கட்டுமானம் தொடர்பான பரிந்துரைகளையும் அனுப்பியுள்ளது.

மதுரை புதுநத்தம் சாலையில் தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தின் இணைப்புப்பகுதி, கடந்த ஆகஸ்ட் 28 ஆம்தேதி இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். விபத்து குறித்து ஆய்வு நடத்திய திருச்சி என்ஐடி பேராசிரியர் தலைமையில் குழு விரிவான ஆய்வறிக்கையை தேசிய நெடுஞ்சாலைத் துறையிடம் தாக்கல் செய்துள்ளது.

இதில், "ஹைட்ராலிக் பளு தூக்கும் இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு, பாலத்தில் கர்டர் பொருத்தும் பணிகளில் கூடுதல் அனுபவம் இல்லாத தொழிலாளர்களை பயன்படுத்தியது, கர்டர் பொருத்தும் பணியின்போது தேசிய நெடுஞ்சாலை துறையால் நியமிக்கப்பட்ட கண்காணிப்பு பொறியாளர்கள் இல்லாதது" ஆகியவையே விபத்திற்கு காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுமானம் தொடர்பாக சில பரிந்துரைகளையும் நிபுணர் குழு அளித்துள்ளது. "கர்டர் பொருத்தும் பணிகளில் ஈடுபடும் பணியாளர்களுக்கு கூடுதல் பயிற்சி அளிக்க வேண்டும் என்றும், கட்டுமான முறையில் மாற்றம் செய்ய வேண்டும்" என ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பாக, தேசிய நெடுஞ்சாலை துறையால் நியமிக்கப்பட்ட 6 கண்காணிப்பு பொறியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், அறிக்கையின் அடிப்படையில் ஒப்பந்ததாரர்களிடம் அபராதம் வசூலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.