தமிழ்நாடு

”மணல் குவாரி - நாங்கள் ஒரு உத்தரவு பிறப்பித்தால் அரசு புதுவிதி கொண்டு வருகிறது”-நீதிமன்றம்

webteam

அரசு தரப்பில் மணல் குவாரிக்கு விதிக்கப்பட்ட விதிகள் குறித்து தகவல் பெற்று தெரிவிக்க வேண்டுமென உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கருணாநிதி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில், 'இராமநாதபுரம் மாவட்டம் இயற்கையாகவே வானம் பார்த்த பூமி, இப்பகுதி மக்கள் விவசாயத்திற்கும் குடிநீருக்கும் கிடைக்கும் ஆதாரத்தை பயன்படுத்தி கடினமான சூழ்நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், கே.வேப்பங்குளம் கிராமத்தில் 4.95 ஹெக்டர் பரப்பளவில் மலட்டாறு பகுதியில் புதிய மணல் குவாரி அமைத்து செயல்பட்டு வருகிறது. இந்த மணல் குவாரிக்கான அனுமதியை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் (02.05.2022) அன்று வழங்கியுள்ளார்.

இது தொடர்பாக உரிய கள விசாரணை செய்யாமலும், பொதுமக்களிடம் கருத்து கேட்காமலும், அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் தவறான அறிக்கையை சமர்ப்பித்து இந்த மணல் குவாரிக்கு அனுமதியை வழங்கியுள்ளனர்.

மணல் குவாரி அமைந்துள்ள கே.வேப்பங்குளம் அருகில் ஐந்திற்கும் மேற்பட்ட போர்வெல் மற்றும் கிணறுகள் அமைத்து அதில் கிடைக்கும் தண்ணீரை தான் சுற்றியுள்ள கிராமங்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது மணல் குவாரி அமைக்கப்பட்டுள்ளதால் தண்ணீர் வினியோகம் தடைபடும் சூழல் ஏற்பட்டுள்ளது.

எனவே, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வழங்கியுள்ள மணல் குவாரிக்கான உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்.' என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மணல் குவாரி அமைப்பதற்கு அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்தது யார்? என கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து, மணல் குவாரிக்கு அனுமதி வழங்கி இருக்கக் கூடாது, மணல் குவாரி அமைப்பதற்கு நீதிமன்றங்கள் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது ஆனால் அதனை மீறி அரசு புதுவிதிகளை உருவாக்குகிறீர்கள் என கருத்து தெரிவித்தனர். அரசு தரப்பில், பல்வேறு விதிகள் விதிக்கப்பட்டு மணல் குவாரிக்கு அனுமதி வழங்கப்பட்டது என தெரிவித்தனர்.

இதனையடுத்து நீதிபதிகள், அரசு தரப்பில் மணல் குவாரிக்கு விதிக்கப்பட்ட விதிகள் குறித்து தகவல் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தனர்.