சசிகலாவை அதிமுகவில் இணைக்க வாய்ப்பில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி இருக்கும் நிலையில், சசிகலாவுக்கு முன் இருக்கும் அரசியல் வாய்ப்புகள் என்னென்ன?
தமிழக அரசியலில் ஜெயலலிதா பல்வேறு முக்கிய முடிவுகள் எடுத்தபோது அவருக்கு உறுதுணையாக இருந்தவர் சசிகலா. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, 2016-ஆம் ஆண்டு ,டிசம்பர் 31-ஆம் தேதி சசிகலா அதிமுகவின் பொதுச் செயலாளராக பதவி ஏற்றார். பின்னர், பல அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்தன. 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சொத்து வழக்கில் தண்டனை பெற்று சசிகலா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார்.
பின்னர் அதிமுகவில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. தற்போது தண்டனை முடிவதால் சசிகலா வரும் 27-ஆம் தேதி விடுதலையாகிறார். அவரை அதிமுகவில் இணைக்க வாய்ப்பில்லை என முதலமைச்சரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறியுள்ளார். எனவே சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு சசிகலாவுக்கு முன் உள்ள அரசியல் சவால்கள் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. பல்வேறு வழக்குகளை எதிர்கொள்ள வேண்டி இருப்பதால், சசிகலா உடனே தடாலடியாக அரசியல் முடிவுகளை எடுக்க வாய்ப்பில்லை என கூறுகிறார் மூத்த பத்திரிகையாளர் ரங்கராஜன்.
சசிகலா அதிமுகவை மீட்டெடுப்பதற்கான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வாய்ப்பு இருப்பதாகக் கூறும் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம், தலைமை கழகத்துக்கு செல்ல வாய்ப்புள்ளதாக கூறுகிறார்.
சசிகலா விடுதலை ஆக இருக்கும் 27ஆம் தேதி தான் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடம் திறக்கப்பட உள்ளது. எனவே சசிகலா விடுதலைக்கு பின்பு தமிழக அரசியல் களம் மேலும் பரபரப்படையும் என்றே கணிக்கப்படுகிறது.