2025-26 ஆம் நிதியாண்டுக்கான ஒன்றிய பட்ஜெட்டில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் எதிர்பார்ப்புகள் என்ன? என்பதை விரிவாக பார்க்கலாம் .
2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை ஒரு வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான லட்சியப் பயணத்தில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன என மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். 2016 ஆம் ஆண்டுதான் ஸ்டார்ட்-அப் இந்தியா திட்டம் ஒன்றிய அரசால் தொடங்கப்பட்டது.
அதேபோல, தமிழ்நாடு அரசும் ஸ்டார்ட் அப் தமிழ்நாடு திட்டத்தை தொடங்கி தொழில்முனைவோருக்கு வழிகாட்டுதல், நிதியுதவி உள்ளிட்டவைகளை வழங்கி வருகிறது.
2016 ஆம் ஆண்டில் இந்தியாவில் 400 ஸ்டார்ட் அப் நிறுவனங்களே இருந்தன. 2024 ஆம் ஆண்டில் 1, 42, 450 நிறுவனங்களாக வளர்ந்து நிற்கின்றன. ஸ்டார்ட் அப் துறை முன்னேற்றப் பாதையில் இருந்தாலும், போதுமான வளர்ச்சி இல்லை என துறை சார்ந்தவர்கள் கூறுகின்றனர்.
இந்தியா , சீனா இரண்டு நாடுகளுக்கும் இடையேயான ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் வளர்ச்சியில் சீனாவைவிட இந்தியா 20 ஆண்டுகள் பின்தங்கி இருப்பதாகவும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. சீனாவின் அசுர வளர்ச்சிக்கு அவர்களின் ஸ்டார்ட்- அப் கொள்கைகளே முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் தொடங்குவது முதல், அவை தொடர்ச்சியாக வெற்றி பெற அரசின் பங்களிப்பு இன்னும் அதிகமாக தேவைப்படுகிறது என தொழில் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் கூறுகின்றனர். பட்ஜெட்டில் இத்துறைக்கு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்படும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.