தேனி மாவட்டம் லட்சுமிபுரத்தில் கிணற்றுக்கு வழங்கப்பட்ட மின் இணைப்பை துண்டிக்கக்கோரும் வழக்கில், ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
லட்சுமிபுரத்தைச் சேர்ந்த ரங்கசாமி என்பவர் தொடர்ந்த வழக்கில், பன்னீர்செல்வத்தின் கிணற்றுக்கு விதிமீறி தரப்பட்ட மின் இணைப்பை துண்டிக்க வேண்டுமெனக் கோரியிருந்தார். இந்த வழக்கில், மாவட்ட ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தனர். இதன்படி ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்தார்.
அதில் ஆற்றின் கரையிலிருந்து 200 மீட்டர் தூரத்துக்கு மின் இணைப்பு தரக்கூடாது என்ற விதி பொதுக்கிணற்றுக்கு பொருந்தாது என்றும், தண்ணீரை லாரிகளில் கொண்டு செல்ல அனுமதி பெறப்பட்டிருப்பதாகவும் அறிக்கையில் கூறியிருந்தார். அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை ஆகஸ்ட் 21-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.