தமிழ்நாடு

”கலைஞர் உணவகம் வருவதை வரவேற்கிறோம்; வாழ்த்துகிறோம்”- செல்லூர் ராஜு

sharpana

“கலைஞர் உணவகம் கொண்டு வருவதை வரவேற்கிறோம், வாழ்த்துகிறோம்; அதே நேரத்தில் அம்மா உணவகங்களை மறைக்காமல் கலைஞர் உணவகங்கள் செயல்படுத்த வேண்டும்” என மதுரையில் செல்லூர் கே.ராஜு பேட்டியளித்துள்ளார்.

நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் மதுரை அதிமுகவினரிடம் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு விருப்ப மனுக்களை வாங்கினார். ஏராளமான அதிமுகவினர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்தனர். அந்த நிகழ்வில், முன்னாள் எம்.பி கோபாலகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர் . பின்னர் செய்தியாளர்களிடம் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு பேசுகையில்

"நகர்புற தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றி பெறும், அதிமுகவை வெல்ல தமிழகத்தில் எந்தவொரு சக்தியும் இல்லை.
அதிமுக ஆட்சிக் காலத்தில் மக்களுக்கு தரமான அரிசி வழங்கினோம் .

தரமற்ற அரிசி அதிமுக ஆட்சிக் காலத்தில் கொள்முதல் செய்யப்பட்டது என்ற அமைச்சர் மூர்த்தியின் கருத்து தவறானது. அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் எந்தவொரு சலசலப்பும் நடக்கவில்லை. அமைதியான முறையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அதிமுக ஆட்சிக் காலத்தில் தக்காளி விலை 100 ரூபாய்க்கு விற்கப்பட்டபோது கூட்டுறவு அங்காடிகளில் தக்காளி கிலோ 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

கலைஞர் உணவகங்கள் தொடங்கப்படுவதில் அதிமுகவுக்கு எந்தவொரு மாற்று கருத்தும் இல்லை. கலைஞர் உணவகம் கொண்டு வருவதை வரவேற்கிறோம்;வாழ்த்துகிறோம். ஆனால், அம்மா உணவகங்களை மறைக்காமல் கலைஞர் உணவகங்கள் செயல்படுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.