தமிழ்நாடு

வெல்கம் கிறிஸ்துமஸ்: உற்சாகமாக உதகையில் நடைபெற்ற கேக் மிக்ஸிங் திருவிழா

webteam

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை வரவேற்கும் விதமாக கேக் மிக்ஸிங் திருவிழா உதகையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் சுற்றுலா பயணிகளுடன் இணைந்து நடைபெற்றது.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஐரோப்பியர்களால் ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் குளிர் காலத்தில் இருந்து தங்களது உடலை வெப்பமடையச் செய்ய உலர்ந்த பழங்கள், உயர்ரக மதுபானங்களை கொண்டு கேக் செய்து சாப்பிடுவது வழக்கம்.

இந்த கேக் மிக்ஸிங் கலாச்சாரம் சுற்றுலா நகரமான உதகையில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலம் முதல் தொடர்ந்து நவம்பர், டிசம்பர் மாதங்களில் பிரபல நட்சத்திர ஓட்டல்களில் கொண்டாடுவது வழக்கம்.

இந்நிலையில், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை வரவேற்கும் வகையில் உதகையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் பிரமாண்டமான கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கும் பணியில் சுற்றுலா பயணிகளும் பங்கேற்றனர்.

திராட்சை, முந்திரி, உலர் பழங்கள், உயர்ரக வெளிநாட்டு மதுபானங்களைக் கொண்டு கேக் மிக்ஸிங் திருவிழா கொண்டாடப்பட்டது. தற்போது கலவை செய்யப்பட்டுள்ள இந்த கேக் மிக்ஸிங், கிறிஸ்துமஸ்-க்கு சில நாள் முன்பு வரை பதப்படுத்தப்பட்டு தயார் நிலையில் வைக்கப்படும். இதைத் தொடர்ந்து கிறிஸ்துமஸ் அன்று விடுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு இந்த கிறிஸ்துமஸ் கேக் பரிசாக வழங்கப்படும்.

ஐரோப்பியர்கள் இந்தியாவை ஆண்ட காலம் முதல் இந்த கேக் மிக்ஸிங் திருவிழா, உதகையில் உள்ள பல பிரபல நட்சத்திர விடுதிகளில் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.