தமிழ்நாடு

ஆசிரியர் நியமனத்தில் வெயிட்டேஜ் முறை: தமிழக அரசு உறுதி

rajakannan

தமிழகத்தில் ஆசிரியர்கள் நியமனத்தில் வெயிட்டேஜ் முறையைத் தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

கடந்த 2013 முதல் ஆசிரியர் நியமனத்தில் வெயிட்டேஜ் முறை கொண்டு வரப்பட்ட நிலையில், அதுகுறித்து கடந்த‌ சில ஆண்டுகளாகவே குழப்பம் நீடித்து வந்தது. வெயிட்டேஜ் முறையால் பாதிக்கப்படுபவதாக பலரும் கூறிவந்த நிலையில், அதுகுறித்து பரிசீலிப்பதாக அரசு கூறி வந்தது. இந்நிலையில், தற்போது ஆசிரியர்கள் நியமனத்தில் வெயிட்டேஜ் முறையைத் தொடர அரசு இப்போது முடிவு செய்துள்ளது. 

தரமான ஆசிரியர்களை உருவாக்கும் நோக்கிலேயே வெயிட்டேஜ் முறை கொண்டுவரப்பட்டது என்றும் அடிப்படையில் இருந்தே சிறப்பானவர்களைத் தேர்வு செய்வதே இதன் நோக்கம் என்றும் விளக்கம் தரப்பட்டுள்ளது. ஏராளமானோருக்கு பணி கிடைப்பதில் வெயிட்டேஜ் முறை தடையாக இருப்பதாகப் புகார் எழுந்த நிலையில், அது தொடர்பாக நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டு இருந்தன. வெயிட்டேஜ் முறையில் மாற்றம் செய்யப்படும் என்ற எதிர்ப்பார்ப்பும் இருந்த நிலையில், அரசு இவ்வாறு முடிவு செய்துள்ளது.

வெயிட்டேஜ் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

வெயிட்டேஜ் முறையிலேயே இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் பணி நியமனம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், வெயிட்டேஜ் எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதைப் பார்க்கலாம்.

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்திற்கு வெயிட்டேஜ் முறை பின்பற்றப்படும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை பணி நியமனம் செய்ய டெட் மதிப்பெண்களும் கட்டாயம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புகள் வரை இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படும் நிலையில் அவர்களை நியமிக்கும் போது 12ஆம் வகுப்பில் 1‌5 மதிப்பெண்ணும், டிப்ளமோவில் 25 மதிப்பெண்ணும், டெட் தேர்விலிருந்து 60 மதிப்பெண்ணும் சேர்த்து வெயிட்டேஜ் கணக்கிடப்படும். அதேபோல், 5 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படும் நிலையில், 12ஆம் வகுப்பில் 10மதிப்பெண்ணும், இளநிலை பட்டத்தில் 15 மதிப்பெண்ணும், பிஎட்டில் 15 மதிப்பெண்ணும், டெட் தேர்வில் 60 மதிப்பெண்ணும் சேர்த்து வெயிட்டேஜ் கணக்கிடப்படும்.