ஆழ்ந்த காற்றழுந்த தாழ்வு மண்டலம் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்துள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மன்னார்வளைகுடாவில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்துள்ளது. மேலும், அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
முன்னதாக செய்தியாளரகளை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், “புயல் வலுவிழந்ததும் கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கனமழை முதல் அதிகனமழை பெய்யும்.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, புதுச்சேரி பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கனமழை முதல் அதிகனமழையும் ஏனைய கடலோர மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்” எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.