தமிழ்நாடு

சபாநாயகர் நோட்டீஸ்-க்கு உரிய பதிலை அளிப்போம்: அறந்தாங்கி எம்.எல்.ஏ

சபாநாயகர் நோட்டீஸ்-க்கு உரிய பதிலை அளிப்போம்: அறந்தாங்கி எம்.எல்.ஏ

webteam

சபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டீஸ்-க்கு உரிய பதிலை அளிப்போம் என்று அறந்தாங்கி எம்.எல்.ஏ ரத்தினசபாபதி, விருத்தாச்சலம் எம்.எல்.ஏ கலைச்செல்வன் ஆகியோர் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். 

அதிமுக எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய மூவரின் மீது சபாநாயகரிடம், கொறடா ராஜேந்திரன் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் எம்எல்ஏக்கள் 3 பேரும் 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கக் கோரி, சபாநாயகர் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இதற்கிடையே, சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர, பேரவை செயலாளரிடம் திமுக மனு அளித்துள்ளது. இந்நிலையில் இன்று 3 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க தடை கோரி, உச்ச நீதிமன்றத்தில் திமுக முறையிட்டது.

இந்நிலையில் சபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டீஸுக்கு எதிராக அதிருப்தி அதிமுக எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதில் சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஊடகங்கள் மூலம் அறிந்ததாகவும், எனவே சபாநாயகர் தங்கள் மீது நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டுமெனவும் வழக்கில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த, அறந்தாங்கி எம்.எல்.ஏ ரத்தினசபாபதி கூறும்போது, ’’சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸ் கிடைத்தது. அதை வழக்கறிஞர்களுடன் நாங்கள் மூன்று எம்.எல்.ஏக்களும் ஆலோசித்து தக்க பதிலை அனுப்ப இருக்கிறோம். இதற்கிடையே, சபாநாயகர் மீது திமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொடுத்திருக்கிறார்கள். நாங்கள் உச்சநீதிமன்றத்தில், சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் நடவடிக்கையில் இருக்கும்போது, எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று வழக்குத் தொடர்ந்துள்ளோம். வரும் 6 ஆம் தேதி அந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. எம்.ஜி.ஆருக்கு பிறகு ஜெயலலிதாவை பின்பற்றி நாங்கள் செயல்பட்டு கொண்டிருக்கிறோம். எங்களை வெற்றி பெற வைத்ததும் ஜெயலலிதாதான். எனவே, அவரின் லட்சியத்தை, கொள்கையை, கட்சி நலனை எங்களை விட பெரிதாக கருதுபவர்கள் யாரும் கிடையாது. 

இடையிலே, சட்டசபையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தபோது அதை முறியடித்தவர்கள் நாங்கள். ஆனால் அதை ஓ.பன்னீர்செல்வம் மற்றும் 11 எம்.எல்.ஏக்கள் ஆதரித்தார்கள். ஆட்சியை கலைக்க வேண்டும் என்று நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு ஆதரவாக செயல்பட்டவர்களுக்கு துணை முதல்வர், ஒருங்கிணைப்பாளர், தமிழ்ப்பண்பாட்டுத் துறை அமைச்சர் என பரிசுகளை கொடுத்திருக்கிறார்கள். ஆட்சி நீடிக்க வேண்டும் என்று நினைத்தவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்கள்’’ என்றார்.

விருதாச்சலம் எம்.எல்.ஏ கலைச்செல்வன் கூறும்போது, ‘’சசிகலா அணியை, அதிமுகவின் மற்றொரு அணி என்றே நீதிமன்றம் கூறியது. அவர்களுடன் தான் நாங்கள் இருந்தோம். ’ நாங்கள் ஒரு அணியாக பெயர் வைத்துக்கொள்ளலாமா என்று சசிகலா நீதிமன்றத்தில் ஒரு மனு போட்டார். அதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், தற்காலிகமாக வைத்துக்கொள்ளலாம் என அறிவித்தது. இதையடுத்து அம்மா மக்கள் முன்னேற்றம் கழகத்தை ஆரம்பித்தார்கள். அதில்தான் நாங்கள் இருந்தோம். இப்போது 19 ஆம் தேதி, அமமுகவை கட்சியாக பதிவு செய்திருக்கிறார்கள். நாங்கள் அதில் கலந்துகொள்ளவில்லை. அந்தக் கட்சியின் உறுப்பினராகவும் நாங்கள் இல்லை. அதனால் நாங்கள் அதிமுகதான். இந்த ஆட்சிக்கும் கட்சிக்கும் எப்போதும் நாங்கள் விசுவாசமாக இருப்போம்’’ என்றார்.