கொரோனா பரவல் தடுப்புக்கான விழிப்புணர்வில், ஊடகங்களின் பங்கு முக்கியமானது என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காட்சி ஊடகங்களின் செய்தி ஆசிரியர்கள் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் அவர் இதனை தெரிவித்தார்.
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையின் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், கொரோனா விழிப்புணர்வு குறித்து காட்சி ஊடகங்களின் செய்தி ஆசிரியர்கள் உடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
தலைமைச் செயலகத்தில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு ஊடகங்களின் செய்தி ஆசிரியர்கள் பங்கேற்றனர். கூட்டத்தின் தொடக்கத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகக் கூறினார்.
அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும், மக்களிடம் அதனை சரியாக கொண்டு சேர்ப்பதில் ஊடகங்களின் ஒத்துழைப்பு மிகவும் முக்கியம் என தெரிவித்தார். கொரோனா தொடர்பான செய்திகளை மிகுந்த கவனத்துடன் வெளியிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
ஊடகவியலாளர்கள் அரசுக்கு ஆக்கபூர்வமான ஆலோசனை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட முதல்வர், அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள பல்வேறு விழிப்புணர்வு வாசகங்களை தங்கள் ஊடகங்கள் மூலம் வெளியிட்டு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.
முதல்வரின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட செய்தி ஆசிரியர்கள், அரசுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர், குறிப்பாக ஆக்சிஜன் இருப்பு, தேவை, மருத்துவமனையில் உள்ள படுக்கைகளின் எண்ணிக்கையை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.
ஊடகத்தினர் முன்கள பணியாளர்கள் என்ற அறிவிப்பில் அனைத்து பணியாளர்களையும் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது. மேலும், ரெம்டெசிவர் மருந்து யாருக்கு முக்கியம் என்பதை மக்களுக்கு அரசு உணர்த்த வேண்டும் என்றும் எடுத்துக் கூறினர்.