கேரளாவில் வீட்டு சிறையில் வைக்கப்பட்டிருந்த ஹாதியா தொடர்ந்து படிக்க நீதிமன்ற உத்தரவுபடி ஏற்பாடுகள் செய்யப்படும் என அவர் பயின்று வந்த தனியார் மருத்துவக்கல்லூரி முதல்வர் கண்ணன் உறுதியளித்துள்ளார்.
கேரளாவைச் சேர்ந்த அகிலா என்ற ஹாதியா, சேலம் இளம்பிள்ளை சாலையிலுள்ள தனியார் ஹோமியோபதி மருத்துவக்கல்லூரியில் பயின்றுவந்தார். அவர் இஸ்லாமிய இளைஞரை திருமணம் செய்ததை எதிர்த்து அவரது பெற்றோர் வழக்கு தொடர்ந்த நிலையில் ஹாதியா படிப்பைத் தொடர முடியாமல் இருந்தது. அவரது பெற்றோர் ஹாதியாவை வீட்டில் வைத்திருந்தனர்.
இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, நீதிபதிகள் ஹாதியாவின் விருப்பத்தைக் கேட்டனர். அவர் தனக்கு விடுதலையும் சுதந்திரமும் வேண்டும் எனக் கூறினார். தான் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவித்தார். படிப்பைத் தொடர விரும்புகிறாரா என நீதிபதிகள் கேட்டதற்கு நிச்சயமாக என ஹாதியா பதிலளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து அவரை சேலம் ஹோமியோபதி கல்லூரியில் படிப்பைத் தொடர ஏற்பாடு செய்யுமாறும் அவருக்கு விடுதியில் இடம் தருமாறும் கல்லூரிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அவருக்கு கல்லூரி முதல்வரை பாதுகாவலராக நியமித்தும் உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில் ஹாதியா படிப்பை முடிப்பதற்கு ஏதுவான பாதுகாப்பு தங்கள் கல்லூரியில் உள்ளதாக மருத்துவக்கல்லூரியின் முதல்வர் கண்ணன் புதியதலைமுறையிடம் தெரிவித்தார்.