2026 சட்டமன்றத் தேர்தலில் நிச்சயம் வெற்றிபெறுவோம் என்று தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சென்னை பனையூர் கட்சி அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொதுச்செயலாளர் ஆனந்த், பொருளாளர் வெங்கட்ராமன் ஆகியோருடன் இணைந்து மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் தமிழக வெற்றிக்கழகத்தின் இரண்டாம் கட்ட மாவட்டச்செயலாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ளார். புதிதாக நியமனம் செய்யப்பட்ட 19 மாவட்ட செயலாளர்களை தனித்தனியாக சந்தித்து விஜய் நேர்காணல் நடத்தினார்.
அப்போது பேசிய விஜய், மக்கள் இயக்கமாக இருந்த நேரத்தில் நன்றாக பணியாற்றிய உங்களை நம்பியே கட்சி தொடங்கியதாக குறிப்பிட்டுள்ளார். 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நிச்சயம் வெற்றிபெறுவோம் என்றும், மக்களுக்காகவே இந்த கட்சி தொடங்கப்பட்டுள்ளதாகவும், மக்களுக்காகவே செயல்பட வேண்டும் என்றும் அவர் மாவட்டச் செயலாளர்களிடம் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தவகையில், தவெகவில் புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட பொறுப்பாளர் ஒருவர் இதுக்குறித்து நெகிழ்ச்சி தெரிவிக்கையில், " பதவி நியமனம் செய்திருப்பது என் வாழ்வில் அளவில்லாத சந்தோஷம். நான் பிறந்தபோது எனக்கு கிடைக்கும் சந்தோஷத்தை போல, அவரால் எனக்கு தற்போது மகிழ்ச்சி கிடைத்துள்ளது. இதற்கு உறுதுணையாக இருந்த கழக பொதுசெயலாளர்களுக்கும் தளபதி விஜய் அண்ணாவிற்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
இதுவரை மக்களுக்கு உதவி செய்துள்ளோம். இப்போது மக்களின் பிரச்னையை கையில் எடுக்க போகிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.