துள்ளித் திரிந்து விளையாட வேண்டிய சிறு வயதில், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி அவர்களின் குழந்தை பருவத்தை வீணடித்து விடுகிறோம் என நீதிபதி கிருபாகரன் தெரிவித்தார்.
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு, முதல் வகுப்பிலே எட்டு பாடங்கள் இருப்பதாகவும் எனவே அதனை குறைக்கக்கோரியும் வழக்கறிஞர் புருஷோத்தமன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பாடத்திட்டத்தை குறைப்பது தொடர்பாக சிபிஎஸ்இ, மத்திய அரசு 4 வாரத்திற்குள் பரிசீலித்து முடிவெடுக்க நீதிபதி உத்தரவிட்டார். மேலும் வழக்கு தொடர்பாக கருத்து தெரிவித்த நீதிபதி, துள்ளித் திரிந்து விளையாட வேண்டிய சிறு வயதில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி, அவர்களின் குழந்தை பருவத்தை வீணடித்துவிடுகிறோம் என கூறினார். மேலும் தனிக்குடித்தனம், பணம் சம்பாதிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக குழந்தைகளை சிறு வயதில் பள்ளிக்கு அனுப்பி அவர்களின் விளையாட்டு நேரத்தை வீணடித்துவிடுவதாகவும் நீதிபதி தெரிவித்தார்.