சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயிலில் தற்காலிக பணியாளராக பணியாற்றிய அஜித் குமார் என்ற இளைஞர், திருப்புவனம் காவல்துறையால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், அஜித் குமாரின் உடன் பிறந்த சகோதரர் நவீன் புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது...
”நகை மாயமான வழக்கில் என்னையும் எனது சகோதரரையும் காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில், திருப்புவனம் பைபாஸ் அருகே உள்ள ஒரு தனியார் தோப்பில் வைத்து என்னையும் எனது அண்ணனையும் தனிமைப்படுத்தி, கடுமையாக சித்திரவதை செய்தார்கள். இருவரையும் மாறி மாறி லத்தியால் அடித்தார்கள். என் கண் முன்னே என் அண்ணனின் கைகளை கட்டி வைத்து அடித்தார்கள். எடுத்த நகையை உடனடியாக கொடுக்கச் சொல் எனக் கூறி அடித்தார்கள்.
நகையை எடுத்திருந்தால் தானே கொடுக்க முடியும். என்னை அடித்தால் என் அண்ணன் உண்மையை சொல்வார் எனக் கூறி, முட்டிக்காலில் அமரச் சொல்லி அடித்தார்கள். இந்த சித்திரவதை நடந்த பின், நான் வீட்டிற்கு வந்தபோது தான் என் அண்ணன் இறந்துவிட்டார் என்ற செய்தியை அறிந்தேன்.
இது போன்ற சம்பவம் மற்றவர்களுக்கு நடைபெறக் கூடாது. இந்த சம்பவத்திற்கு முழு பொறுப்புள்ள அந்த ஆறு போலீசார் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். எங்களுக்கு நீதிதான் வேண்டும். எந்த நிவாரணமும் தேவை இல்லை; அரசு வேலை பற்றிய எந்த உத்தரவாதமும் இதுவரை யாரும் தரப்படவில்லை. இது போன்ற நிகழ்வுகள் இனிமேலும் யாருக்கும் நடக்கக் கூடாது என்பதே தமிழக முதல்வருக்கு நாங்கள் வைக்கும் உண்மையான கோரிக்கை” என்று தெரிவித்தார்.