தமிழ்நாடு

விமானத்தில் நிவாரணப்பொருட்கள் அனுப்ப சரக்கு கட்டணம் இல்லை - அமைச்சர் சுரேஷ் பிரபு

webteam

ஏர் இந்தியா விமானத்தில் நிவாரணப் பொருட்களை கொண்டு வர சரக்கு கட்டணம் இல்லை என மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்

கஜா புயலானது தஞ்சாவூர், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களை புரட்டி போட்டுள்ளது. அரசு ஒரு புறம் தீவிரமாக செயல்பட்டு நிவாரண உதவிகளை செய்து வருகிறது. பிற அரசியல் கட்சிகள், அமைப்புகள், தன்னார்வலர்கள் நிவாரணப் பொருட்களை நேரில் வழங்கி வருகின்றனர் சிலர் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்டு அதன்மூலம்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு உள்ளிட்ட பொருட்களை வழங்கி வருகின்றனர். 

பல்வேறு வகையான நிவாரண பொருட்கள் வெளியூர்களில் இருந்து டெல்டா மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இந்நிலையில் ஏர் இந்தியா விமானத்தில் நிவாரணப் பொருட்களை கொண்டு வர சரக்கு கட்டணம் இல்லை என மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள சுரேஷ் பிரபு, ''தமிழகத்திற்கு நிவாரணப் பொருட்களை ஏர் இந்தியா விமானத்தில் எடுத்துச்செல்ல கட்டணம் வசூலிக்கப்படாது என குறிப்பிட்டுள்ளார். டெல்லியைச் சேர்ந்தவர்கள் புயலால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ நினைத்தால், தமிழ்நாடு அரசு இல்லத்தை அணுகுமாறு மத்திய அமைச்சர் சுரேஷ்பிரபு கேட்டுக்கொண்டுள்ளார். கஜா புயலால் பாதிக்கப்பட்டோர் மீண்டும் இயல்புநிலைக்கு திரும்ப பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ள அமைச்சர் சுரேஷ்பிரபு, தமிழகத்தைச் சேர்ந்த சகோதர, சகோதரிகளுக்கு நம்மால் முடிந்த உதவிகளை அனைவரும் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

முன்னதாக தமிழகத்திற்குள்ளும், பிற மாநிலங்களிலிருந்‌தும் கொண்டு வரப்படும் நிவாரணப் பொருட்களுக்கு கட்டண விலக்கு அளிக்கப்படுவதாக ரயில்வே வாரியம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.