தமிழ்நாடு

“இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்பு திட்டமல்ல” - வீரமணி விளக்கம்

“இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்பு திட்டமல்ல” - வீரமணி விளக்கம்

rajakannan

இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டம் அல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்று திராவிடர் கழக தலைவர் கீ.வீரமணி தெரிவித்துள்ளார்.

பொருளாதார ரீதியில் நலிவுற்ற பொதுப் பிரிவினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா மக்களவையிலும், மாநிலங்களவையிலும் சமீபத்தல் நிறைவேறியது. இதனைத்தொடர்ந்து நலிவுற்ற பொதுப் பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திருத்தத்திற்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார். 

பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் இந்தச் சட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது. இருப்பினும், இந்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இடஒதுக்கீடு தொடர்பான விவாதங்களும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், 10 சதவிகித இடஒதுக்கீடு குறித்து திராவிடர் கழக தலைவர் கீ.வீரமணி‘தி இந்து’ ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் விரிவாக பேசியுள்ளார். அந்தப் பேட்டியில், “நம்முடைய அரசியலமைப்புச் சட்டம் பொருளாதார ரீதியாக பின் தங்கிய மக்களுக்காக இடஒதுக்கீடு வழங்கவில்லை. 

இடஒதுக்கீடு என்பது சமூக ரீதியாக, கல்வி ரீதியாக பின் தங்கிய மக்களுக்காக கொண்டுவரப்பட்டது. அப்படி பார்க்கையில், 10 சதவிகித இடஒதுக்கீடு என்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. நீதியற்றதும் கூட. அரசியலமைப்பு சட்டப்பிரிவு 46ல் உள்ள மாநில அரசின் சிறப்பு ஒதுக்கீடு கூட வலிமை குறைந்தவர்கள், எஸ்.சி., எஸ்.டி பிரிவினருக்கானது மட்டுமே. இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டம் அல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் அனுபவித்த அநீதிகளில் இருந்து மீள்வதற்கான உரிமை அது” என்று கூறியுள்ளார். 

மேலும், “நம்முடைய நாட்டில், ஒடுக்குமுறை என்பது முதன்மையாக சாதிய ரீதியில்தான் உள்ளது. இன்று பணக்காரராக இருக்கும் ஒருவர் நாளை ஏழையாக மாறலாம். வாழ்க்கை எப்போது வேண்டுமென்றாலும் மாறலாம். ஒரு சாதியில் நீங்கள் பிறந்துவிட்டால், இறக்கும் வரை அதில் இருந்து மாற முடியாது. கல்லறையில் அடக்கம் செய்வது வரை சாதிய ரீதியில்தான் நடைபெறுகிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.