மலையில் கடகடவென்று தீ பரவியபோது என்ன செய்வது என்று தெரியாமல் பாறைக்கு இடையில் குதித்து தப்பித்தோம் என தீ விபத்தில் சிக்சிய மாணவி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்ட மலைப்பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் மலையேற்றம் சென்ற 36 பேர் சிக்கிக் கொண்டனர். அவர்களில் 15 பேர் மீட்கப்பட்டுள்ளனர். சென்னையை சேர்ந்த 22 பெண்கள் உட்பட 24 பேரும், திருப்பூரைச் சேர்ந்த 12 பேரும் மலையேற்றம் சென்றது தெரியவந்துள்ளது. தகவலறிந்த பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், மீட்பு பணிகளுக்காக விமானப்படை ஹெலிகாப்டர்களை அனுப்ப உத்தரவிட்டார். இரவு நேரம் என்பதால் மீட்புப் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் தீ வேகமாக பரவியபோது பாறைக்கு இடையில் குதித்து தப்பித்ததாக தீ விபத்தில் சிக்கிய மாணவி விஜயலட்சுமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக புதிய தலைமுறையிடம் பேசிய அவர், “ சென்னையிலிருந்து மொத்தமாக 24பேர் மலையேற்றம் வந்தோம். அவர்களில் இரண்டு பேர் ஆண்கள். மற்ற 24 பேரும் பெண்கள்தான். இதுதவிர மற்றொரு குழுவினரும் வந்திருந்தார்கள். மதிய சாப்பாட்டை முடித்துவிட்டு கிளம்பலாம் என நினைத்தோம். அப்போது திடீரென புகை வந்தது. நாங்கள் எதிர்பார்க்காத போதே அதிகப்படியான புகை எங்களது கால் வரை வந்தது. என்ன செய்வதேன்று தெரியாமல் ஆளுக்கொரு பக்கம் ஓடினோம். நாங்கள் தப்பிக்கலாம் என நினைத்தபோது எந்த பக்கத்திற்கும் வழி இல்லாமல் தீ முழுவதும் எங்களை சூழ்ந்து இருந்தது. ஒரு சிலர் மட்டும் பாறைக்கு இடையில் குதித்து தப்பித்தோம். அவர்களுக்கு ஏதும் ஆகவில்லை. ஆனால் மற்றவர்கள் ஒவ்வொரு பக்கமாக ஓடினார்கள். அவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை” என கூறினார்.