தமிழ்நாடு

“1ஜியும் வேண்டாம்; 2ஜியும் வேண்டாம்” - கமல்ஹாசன் திட்டவட்டம்

“1ஜியும் வேண்டாம்; 2ஜியும் வேண்டாம்” - கமல்ஹாசன் திட்டவட்டம்

webteam

மக்களவை தேர்தலின்போது 1ஜியும் வேண்டாம், 2ஜியும் வேண்டாம் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் சில மாதங்களில் வரவுள்ளதையடுத்து பல்வேறு கட்சிகளும் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளன. மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் இந்தத் தேர்தலில் அவர்கள் கட்சி போட்டியிடும் என ஏற்கனவே கூறியிருந்தார். ஆனால் யாருடன் கூட்டணி என்பது குறித்து தேர்தலின் போது, முடிவு செய்யப்படும் எனவும் அவர் அறிவித்திருந்தார். இதற்கிடையே கல்லூரி விழாக்களில் மாணவர்கள் முன்பு அவர் தொடர்ந்து உரையாற்றி வருகிறார்.

இந்நிலையில் சென்னை பெண்கள் கிறிஸ்த்துவக் கல்லூரியில் உரையாற்றி அவர், “எதுவாக இருந்தாலும் அதில் கால் பதிக்க வேண்டும் என்பதுதான் எங்கள் ஆசை. உடனே இந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு, டெல்லி சென்று திரும்பும் போது கமல்ஜி ஆக வர வேண்டும் என்ற ஆசை எனக்கில்லை. சிலர் 1ஜியோடு வருகிறார்கள். சில பேர் 2ஜியோடு வருகிறார்கள். எனக்கு 1ஜியும் வேண்டாம், 2ஜியும் வேண்டாம். 

இந்த நாடாளுமன்றத்தில் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்திற்கு தக்க இடம் கிடைத்தால் கண்டிப்பாக தமிழகத்திற்கு நல்லது நடைபெறும். மக்கள் நீதி மய்யம் கட்சியின் முழுமுதல் கவனமும் நோக்கமும் தமிழத்தின் நலன் மட்டுமே. அதற்கு வழிவகுக்கும் அனைத்தையும் நாங்கள் முன்னெடுப்போம். கூட்டாட்சியின் மாண்பினையும், சுயாட்சியின் வலிமையையும் வலியுறுத்துவோம். மத்தியில் இதுவா, அதுவா என யார் ஆட்சி செய்யப்போகிறார்கள் எனத் தெரியவில்லை. எதுவாக இருந்தாலும், எங்களுக்கு இதெல்லாம் வேண்டும் எனக்கேட்க வேண்டும். அது உங்களுக்கே தெரியும்” என்றார்.