தமிழ்நாடு

“விடியலுக்கு காத்திருக்கிறோம்”- 3 வருடங்களாக அரசு உதவிக்காக அலையும் மாற்றுத்திறனாளி தம்பதி

“விடியலுக்கு காத்திருக்கிறோம்”- 3 வருடங்களாக அரசு உதவிக்காக அலையும் மாற்றுத்திறனாளி தம்பதி

webteam

அரசின் உதவிக்காக தூத்துக்குடியை சேர்ந்த உயரம் குறைவான ஒரு மாற்றுத்திறனாளி தம்பதி, கடந்த 3 ஆண்டுகளாக அலைந்து வருவதாக கூறுகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள என். வேடப்பட்டி கிராமத்தினை சேர்ந்த தம்பதி முத்துப்பாண்டி -முத்துலெட்சுமி. இருவரும் உயரம் குறைந்த மாற்றுத்திறனாளிகள். ஆரம்பத்தில் முத்துப்பாண்டி சின்ன சைக்கிள் மூலமாக துடைப்பம் விற்பனை செய்து வந்துள்ளார். முத்துலெட்சுமி உள்ளுரில் உள்ள ஊரக நூலகத்தில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வந்துள்ளார். இதில் கிடைக்கும் சொற்ப வருமானம் மற்றும் அரசு உதவி தொகை ஆகியவற்றை வைத்து தங்களது குடும்பத்தினை இருவரும் நடத்தி வந்துள்ளனர்.

இடையில் முத்துப்பாண்டிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவரால் பணிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. மேலும் முத்துலெட்சுமி வேலை பார்த்து வந்த ஊரக நூலகத்தில் ஒரு நாளைக்கு 50 ரூபாய் மட்டும் தான் அவருக்கு ஊதியமாக வழங்கப்பட்டுள்ளது. அதிகாரிகளிடம் ஊதியத்தினை உயர்த்தி கேட்ட போது, அவர்கள் உயர்த்தி தர மறுத்த காரணத்தினால் முத்துலெட்சுமியும் வேலையை விட்டு நின்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு தரும் கடன் உதவி தொகையை மட்டும் வைத்து குடும்பதினை நடத்த வேண்டிய சூழ்நிலைக்கு இருவரும் தள்ளப்பட்டுள்ளனர்.

வீட்டு செலவு போக வீட்டுவாடகை, மருத்துச்செலவுக்கு அதிக பணம் செலவு செய்ய வேண்டிய நிலை இருப்பதால் போதிய வருவாய் கிடைக்கமால் இந்த தம்பதியினர் வறுமையில் தவித்து வருகின்றனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பே, சுய தொழில் செய்து கொள்வதற்கு தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் எனவும் கடன் உதவி வழங்க வேண்டும் என்றும் தூத்துக்குடி மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் முத்துப்பாண்டி மனு கொடுத்திருக்கிறார்.

மனுவினை பெற்றுக்கொண்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் கடந்த ஆண்டு எட்டயபுரத்தில் உள்ள கனரா வங்கியில் ரூ.25,000 மானியத்தொகையுடன் ரூ. 1 லட்சம் கடன் தொகை பெற்றுக்கொள்ள பரிந்துரை செய்தது. ஆனால் வங்கியோ, தங்களுக்கு எவ்வித கடிதமும் வரவில்லை என்று கூறி கடன் வழங்க மறுத்து விட்டது. இதனால் மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்திற்கும், வங்கிக்கு நடையாய் நடந்தது தான் மிச்சம் என்கிறார்கள் இவர்கள்.

முத்துபாண்டி இதுகுறித்து நம்மிடையே தெரிவிக்கையில், “நாங்கள் இருவரும், அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி தொகையை மட்டும் வைத்து குடும்பத்தினை நடத்திவருகிறோம். ஆனால் இந்தத் தொகையிலேயே குடும்பத்தை நடத்திவிட முடியாத சூழ்நிலை இருக்கிறது. பெட்டி கடை வைப்பதற்கான கடன் உதவி, 3 சக்கர வாகனம் கிடைக்க அரசு ஏதேனும் வழிவகை செய்ய வேண்டும். 10-ம் வகுப்பு வரை படித்துள்ள என் மனைவி முத்துலெட்சுமிக்கு, ஏதாவது அரசு வேலை கொடுக்க தமிழக அரசு முன் வர வேண்டும்” என்றார்.

- மணிசங்கர்