தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் விதமாக ‘கோவிட் சித்த மருத்துவ சிகிச்சை மையம்’ தொடங்கப்பட உள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஏற்கெனவே இந்திய மருத்துவ வகையைச் சேர்ந்த ஹோமியோபதி, சித்தா உள்ளிட்ட பிரிவுகளை உள்ளடக்கிய 18 கொரோனா சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இதில் இதுவரை 75,000 பேர் சிகிச்சை பெற்று குணம் அடைந்துள்ளனர், அதுமட்டுமின்றி அரசு மருத்துவமனைகளிலும் சித்த மருத்துவம் சார்ந்த மூலிகை குடிநீர் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரி வளாகத்தில் 100 படுக்கை வசதிகள் கொண்ட கோவிட் சித்த மருத்துவ சிகிச்சை மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
“இதில் முதல் நிலை அறிகுறி உள்ளவர்கள் அனுமதிக்கப்பட்டு உணவே மருந்து, மருந்தே உணவு என்ற வகையில் அவர்களுக்கு மூலிகை தேநீர் சித்த மருத்துவம், மருத்துவகுணம் சார்ந்த உணவு உள்ளிட்டவை வழங்கப்பட்டு அதன் மூலம் நோயை குணப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சித்த மருத்துவ மையங்களில் பெரும்பாலும் பாரம்பரிய மூலிகை வகைகளைக் கொண்டே சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பை தடுப்பதில் இந்திய மருத்துவத் துறையை சேர்ந்த சித்தாவின் பங்கு பெருமளவில் பயனாக அமைந்துள்ளது” என புதுக்கோட்டையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.