வறட்சியின் கோரப்பிடியில் தமிழகத்தின் நீர்நிலைகள் சிக்கித் தவிக்கின்றன. இதன்விளைவாக பல்வேறு மாவட்டங்களில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம், மேட்டூர் அணையை நம்பி டெல்டா மாவட்டங்களில் 16 லட்சம் ஏக்கர் விவசாயம் நடைபெறுகிறது. கர்நாடகத்தில் இருந்து திறந்து விடப்படும் காவிரி நீர் மேட்டூர் அணை வழியாகவே தமிழக பாசனத்திற்கு திறக்கப்படுகிறது.
120 அடி நீர்மட்டம் கொண்ட மேட்டூர் அணையின் இன்றைய நீர் மட்டம் 36.54 அடியாக உள்ளது. இதுவே கடந்த ஆண்டான 2015 - 2016 ல் 88.82 அடியாக இருந்தது. நீர் இருப்பைப் பொருத்தவரை தற்போது 10.37 டி.எம்.சியாகவும், கடந்த ஆண்டில் 51.31 டி.எம்.சியாகவும் இருந்துள்ளது.
நெல்லை மாவட்டத்தில் உள்ள 11 அணைகளுக்கு மேற்குத் தொடர்ச்சி மலையே முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகிறது. பிரதானமாக திகழும் பாபநாசம் அணையின் உயரம் 143 அடி. கடந்த ஆண்டின்போது 142 அடியாக இருந்த நீர்மட்டம் தற்போது, 29 அடியாக குறைந்துள்ளது.
156 அடி உயரம் கொண்ட சேர்வலாறு அணையில் கடந்த ஆண்டின்போது 148 அடி அளவுக்கு நீர் நிறைந்திருந்தது. ஆனால், தற்போது 62 அடி உயரத்திற்கு மட்டுமே நீர் இருப்பு உள்ளது. இதேபோன்று 118 அடி உயரம் கொண்ட மணிமுத்தாறு அணையில், கடந்த ஆண்டு 116.55 அடி உயரத்திற்கு நீர் இருந்தது. தற்போது 36.65 அடி உயரத்திற்கு மட்டுமே நீர் உள்ளது.
மொத்த கணக்குப்படி 11 அணைகளில் 96 சதவீதம் இருந்த நீர் இருப்பு தற்போது 7 சதவீதமாக குறைந்து மாவட்டம் முழுவதும் வளர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பிடத்தகும் வகையில் மாவட்டத்தில் உள்ள 2 ஆயிரத்து 518 குளங்களில் ஒன்றில் கூட நீர் இல்லை.
திருச்சி மாவட்டத்தைப் பொருத்தவரையில் கடல்போன்று காட்சியளிக்கும் கூத்தைப்பார் பெரியகுளம், செவந்தா குளம், செம்மண் குளம், மணப்பாறை, துறையூர், லால்குடி உள்ளிட்ட இடங்களில் உள்ள குளங்களும் வறண்டே காணப்படுகின்றன. இதனால் ஆண்டுதோறும் முப்போகம் சாகுபடி செய்யப்படும் நிலையில் தற்போது ஒருபோகம் கூட சாகுபடி செய்யப்படாத நிலை ஏற்பட்டுள்ளது.
திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்ட விவசாயிகளின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குவது சாத்தனூர் அணை. கர்நாடகத்தில் உருவாகும் பெண்ணாற்றிலிருந்து வரும் நீர் இந்த அணையில் தேக்கி வைக்கப்படுகிறது. மொத்தம் 119 அடி உயரம் கொண்ட இந்த அணை, கடந்த ஆண்டின்போது முழுமையாக நிரம்பியது. தற்போது அணையில் நீர்மட்டம் 91.50 அடியாக உள்ளது.
கடந்த ஆண்டின்போது, 7 ஆயிரத்து 321 மில்லியன் கன அடி கொள்ளளவை கொண்டிருந்த சாத்தனூர் அணை, 60 சதவீதம் குறைந்து தற்போது 2 ஆயிரத்து 625 மில்லியன் கன அளவாக உள்ளது. அணைக்கு நீர்வரத்தும் வெளியேற்றமும் இல்லாததால், இதனை நம்பியுள்ள மூன்று மாவட்டங்களில் 60 ஆயிரம் ஏக்கர் அளவுக்கு விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் கடந்த ஆண்டு 63.85 ஆக இருந்த நிலையில் தற்போது 25 அடியாக குறைந்துள்ளது.
கன்னியாகுமரியில் மொத்தம் 48 அடி உயரம் கொண்ட பேச்சிப்பாறை அணையில் கடந்த ஆண்டு 46 அடியாக இருந்த நீர்மட்டம் தற்போது 8 அடியாக குறைந்துள்ளது. இதேபோன்று 77 அடி உயரம் கொண்ட பெருஞ்சாணி அணையில் கடந்த ஆண்டு 75 அடியாக இருந்த நீர்மட்டம் தற்போது 33 அடியாக குறைந்துள்ளது.