நேற்று மாலை முதல் இப்போது வரை, மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரப்பகுதிகளான தென்காசி, குற்றாலம், செங்கோட்டை போன்ற இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை முதல் இடி மின்னலுடன் மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த கன மழை காரணமாக நீண்ட நாள்களுக்குப் பிறகு குற்றாலத்தில் மெயின் அருவி, பழைய குற்றால அருவி, ஐந்தருவி, செண்பகாதேவி அருவி என அனைத்து அருவிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கடந்த இரண்டு மாதங்களாக, கோடை காரணமாக அனைத்து அருவிகளும் வறண்ட நிலையிலேயே இருந்தன. இப்போது மழை காரணமாக அனைத்து அருவிகளும் நீரால் நிறைந்து இருக்கிறது. பழைய குற்றால அருவியின் படிகளிலும்கூட நீர் வழிந்தோடுவதை காணமுடிகிறது. அந்தளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஏற்கெனவே கொரோனா பொதுமுடக்கம் காரணமாக மக்கள் யாரும் குற்றால அருவிகளுக்குள் அனுமதிக்கப்படாமல் இருக்கின்றனர். இப்போதும் அதுவே பின்பற்றுபடுகிறது என்பதால், பாதுகாப்பம்சங்கள் அனைத்தும் கடைபிடிக்கப்படுகின்றன.