தமிழ்நாடு

பூவிருந்தவல்லியில் அனுமதியின்றி ராட்சத ஆழ்துளைக் கிணறுகள் மூலம் தண்ணீர் திருட்டு

பூவிருந்தவல்லியில் அனுமதியின்றி ராட்சத ஆழ்துளைக் கிணறுகள் மூலம் தண்ணீர் திருட்டு

Rasus

சென்னையை அடுத்த பூவிருந்தவல்லி சுற்றுவட்டார பகுதிகளில் அனுமதியின்றி ராட்சத ஆழ்துளைக் கிணறு மூலம் தண்ணீர் திருடப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் அதள பாதாளத்திற்கு சென்றுவிட்டதாக அண்மையில் நடத்திய ஆய்வுகள் எச்சரிக்கின்றன. பருவமழை பொய்த்துப் போனதாலும், ஆழ்துளை கிணறுகள் அதிக அளவில் அமைக்கப்பட்டதாலும் இந்த நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், இந்த கோடைக் காலத்தில் சென்னையில் குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னையில் உள்ள பெரிய ஹோட்டல்கள், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்குவதற்காக பூவிருந்தவல்லி சுற்றுவட்டாரப் பகுதிகளில் ராட்சத ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இங்கிருந்து அனுமதியில்லாமல் லாரிகள் மூலம் குடிநீர் எடுக்கப்பட்டு அவை வர்த்தக ரீதியாக விற்கப்பட்டு வருகின்றன.

இதனால், பூவிருந்தவல்லியை சுற்றியுள்ள செந்நீர்குப்பம், மேப்பூர், திருமழிசை, திருவேற்காடு உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி நீர் அளவு வெகுவாகக் குறைந்திருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும், அனுமதியின்றி லாரிகளில் குடிநீர் பிடித்துச் செல்லப்படுவதை தடுக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.