தமிழ்நாடு

வறண்டது வனம்: சாலையோரம் உலாவும் மான்கள் !

கோடை நெருங்குவதாலும், வனங்களுக்குள் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளதாலும் தேக்கடி பெரியார் புலிகள் காப்பகத்தில் “சாம்பார்” இன மிளாவகை மான்கள் உணவிற்காக சாலையோரம் அலையும் நிலை உருவாகியிருக்கிறது. அவை சருகளுக்குள் புதைந்துள்ள புற்களை தேடி உண்டு வருகின்றன.வழக்கமாக ஏப்ரல் முதல் வாரத்தில் துவங்கும் கோடைகாலம் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தின் இறுதியிலேயே துவங்கிவிட்டதை உணர்த்தும் அளவிற்கு பருவ மழை அனைத்தும் பொய்த்து வறண்ட சூழல் ஏற்பட்டது. மார்ச் மாத துவக்கத்தில் இருந்து கடும் வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. மார்ச் இறுதியை நெருங்கும் இந்நேரத்தி்ல் வனங்களுக்குள் விலங்குகளுக்கு உணவு மற்றும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் வன விலங்குகள் வெளிவரத்துவங்கியுள்ளன.


அந்தவகையில் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தேக்கடி பெரியார் புலிகள் காப்பகத்தில் ஏற்பட்டுள்ள வறண்ட சூழலால், தேக்கடியின் சிறப்பு பெற்ற “சாம்பார்” இன மிளாவகை மான்கள் உணவிற்காக சாலையோரம் உலாவ துவங்கியுள்ளன. அவை சருகளுக்குள் புதைந்திருக்கும் உணவை உண்டு பசியாற்றி வருகின்றன. ஒருபுறம் உணவில்லாமல் வன விலங்குகள் தவிப்பது இருக்க, வன விலங்குகளை காண்பதற்காகவே தேக்கடிக்கு வரும் சுற்றுலா பயணிகள், சாலையோரம் உலாவும் மான்களை மிக அருகில் கண்டு ரசித்து வருகின்றனர். 
                                                                                                          -வி.சி.ரமேஷ் கண்ணன், குமுளி.