தண்ணீர் பஞ்சம் காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் பல கழிப்பறைகள் மூடப்பட்டுள்ளன.
சென்னையின் முக முக்கியமான மருத்துவமனைகளில் ஒன்று ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை. தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் இங்கு நாள்தோறும் ஏராளமான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். ஆயிரக்கணக்கான நோயாளிகள் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகின்றனர். இந்நிலையில் தண்ணீர் பஞ்சம் காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் பல கழிப்பறைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் நோயாளிகள் மிகவும் அவதியுற்று வருகின்றனர்.
ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு சென்னை குடிநீர் வாரிய லாரிகள் மூலம் தண்ணீர் பெறப்படுகிறது. இருப்பினும் மருத்துவமனையின் தண்ணீர் தேவை முழுமையாக நிறைவேறவில்லை. இதனால் பல கழிப்பறைகள் மூடிக் கிடக்கின்றன. மருத்துவமனையின் டவர் 1 மற்றும் டவர் 2 ஆகிய அடுக்குமாடி கட்டடங்களின் தரைத்தளத்தில் உள்ள கழிவறைகள் பெரும்பாலும் மூடப்பட்டு கிடக்கின்றன. இதனால் சிறுநீர் பரிசோதனை செய்யக்கூட கழிவறைக்கு செல்ல முடியாமல் நோயாளிகள் மிகவும் சிரமப்பட்டுள்ளனர். இங்கு நிலவும் தண்ணீர் பற்றாக்குறையை உடனடியாக நீக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாகவும் உள்ளது.