தமிழ்நாடு

கழிவுநீர் கால்வாயில் குடிநீர் குழாய் அமைப்பு; குடிநீரில் சாக்கடை கலந்ததால் வாந்தி மயக்கம்!

webteam

கழிவு நீர் கால்வாயில் குடிநீர் குழாய் அமைத்ததால், குடிநீரில் சாக்கடை கலந்து வாந்தி, பேதி, மயக்கம் ஏற்பட்டுள்ளதால், ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் அருகே முகுந்தகிரி ஊராட்சியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன், ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் சுமார் 17 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 144 புதிய குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. அப்பகுதியிலுள்ள மாரியம்மன் கோயில் தெரு மற்றும் பெருமாள் கோயில் தெருவில் சாலை ஓரத்தில் கட்டப்பட்ட இந்த மழைநீர் கால்வாயை, கிராம மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் செல்லும் கால்வாயாக உபயோகிக்கின்றனர்.

இந்நிலையில் ஜல் ஜீவன் திட்டத்தில் வீட்டிற்கு ஒரு குழாய் என அமைக்கப்பட்ட குழாய்கள், அந்த கழிவுநீர் செல்லும் கால்வாயில் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் தொடர்ந்து பொதுமக்கள், அந்த கழிவுநீர் கால்வாயோடு பொறுத்தப்பட்டிருக்கும் குடிநீர் குழாயை பயன்படுத்தப்படும் போது, குடிநீரில் கழிவு நீர் கலந்து துர்நாற்றம் வீசுவதாகவும், அவ்வப்போது வாந்தி, பேதி, மயக்கம் போன்ற உடல்நலக் குறைவு ஏற்படுவதாகவும், அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பாக மக்கள் தரப்பில், “எங்களின் இந்த பிரச்சனையை, அவசரகால வேலையாக எடுத்து, கழிவு நீர் கால்வாயில் போடப்பட்ட குழாய்களை அகற்றி வேறோரு இடத்தில் சாலையோரத்தில் போடவும். கழிவுநீர் கால்வாயில் குழாய் அமைத்த ஒப்பந்ததாரர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வேண்டுகோள் வைத்துள்ளனர். மேலும் கால்வாயில் கழிவுநீர் நிற்பதால் கொசுத்தொல்லை அதிகரிப்பதாக குற்றம் சாட்டிய பொதுமக்கள், கால்வாயைப் தூர்வாரி சீரமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கேட்டதற்கு, குடிநீர் இணைப்புகளை கழிவுநீர் கால்வாயில் இருந்து அகற்றி வேறு இடத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.