ஆந்திராவில் கனமழை பெய்துவருவதால் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கொசஸ்தலை ஆற்றுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
ஆந்திர மாநிலம் சித்தூரில் பெய்துவரும் தொடர்மழையால் அங்குள்ள அம்மப்பள்ளி அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. அதிலிருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டுவதால் கொசஸ்தலை ஆற்றுக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் நெடியம் கிராமத்தில் உள்ள தரைப்பாலத்தின் மேல் தண்ணீர் செல்வதால் அங்கு போக்குவரத்து தடைபட்டுள்ளது.
2 ஆண்டுகளுக்கு பின் நீர் வரத்து அதிகரித்து வருவதன் காரணமாக விவசாயிகளும், அப்பகுதி மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கொசஸ்தலை ஆற்று நீர் பூண்டி நீர் தேக்கத்தில் சேமிக்கப்படுவதால் சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ஏதுவாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.