தமிழ்நாடு

பாலாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது: தமிழக ஆந்திர எல்லையில் போக்குவரத்து துண்டிப்பு

பாலாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது: தமிழக ஆந்திர எல்லையில் போக்குவரத்து துண்டிப்பு

webteam

ஆந்திராவில் பெய்து வரும்‌ கனமழை காரணமாக 17 ஆண்டுகளுக்குப்பின் பாலாற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. 
கர்நாடக மாநிலம் நந்திதுர்கம் பகுதியில் உருவாகும் பாலாறு, ஆந்திரா மாநிலத்தைக் கடந்து வேலூர் வழியாக தமிழகத்திற்குள் பாய்கிறது. கர்நாடக மாநிலத்தில் கன மழை காரணமாக பாலாற்றில் பேத்தமங்கலம் அணை நிரம்பியது. இதனால் அணையில் உள்ள 14 மதகுகள் திறக்கப்பட்டு அதன்மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 
இதனிடையே ஆந்திராவிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் வேலூர் மாவட்டத்திற்கு வரும் பாலாற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. புல்லூரில் 4,500 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், பாலாற்றில் குளிக்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆழமான பகுதிகளுக்குச் செல்லவேண்டாம் எனவும் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனிடையே, வாணியம்பாடி அருகே காட்டாற்று வெள்ளத்தில் தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டதால் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. வெலதிகாமணி பெண்டா பகுதியில் தரைபாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. அது தெரியாத நிலையில், அவ்வழியாக வந்த சரக்கு வேன் மற்றும் 3 இருசக்கர வாகனங்கள் 7 அடி பள்ளத்தில் விழுந்தன. அதில் 2 பேர் உயிரிழந்த நிலையில், 4 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளப்பெருக்கு காரணமாக தமிழகத்திலிருந்து ஆந்திராவின் வெலதிகாமணி பெண்டா, வீரனமலை உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகளும் ஆந்திராவிலிருந்து வாணியம்பாடிக்கு வரும் பேருந்துகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன

தமிழகத்தில் 222 கிலோ மீட்டர் தொலைவுக்கு பயணிக்கும் பாலாறு, வேலூர் மாவட்டத்தின் விவசாய பணிகளுக்கும், குடிநீர் தேவைக்கும் முக்கிய நீராதாரமாக திகழ்கிறது. தற்போது 17 ஆண்டுகளுக்குப் பிறகு பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.