முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு பங்களாவில், காவலாளியை கொன்றுவிட்டு, அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ளது கோடநாடு எஸ்டேட். சுமார் 350 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட இந்த எஸ்டேட்டில் 10க்கும் மேற்பட்ட நுழைவு வாயில்கள் உள்ளன. நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் அடையாளம் தெரியாத எட்டு நபர்கள் திடீரென கொடநாடு பங்காளாவின் 8 வது நுழைவாயிலுக்குள் நுழைய முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளிகள் ஓம்பகதூர், கிருஷ்ணபகதூர் ஆகியோர் அவர்களைத் தடுத்து நிறுத்த முயற்சி செய்தனர். அப்போது, கொள்ளைக் கும்பலைச் சேர்ந்தவர்கள் கடுமையாக தாக்கியதில் ஓம்பகதூர் பலத்த காயம் அடைந்தார். சத்தம் எழுப்பிய கிருஷ்ண பகதூரை வாயில் துணியை வைத்து அடைத்து, கட்டிபோட்ட கும்பல், பங்களாவுக்குள் நுழைந்து கொள்ளையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், திருடுபோன பொருட்கள் குறித்த முழுமையான தகவல் வெளியாகவில்லை. கொள்ளைக் கும்பலால் தாக்கப்பட்ட காவலாளி ஓம்பகதூர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்த கொள்ளை மற்றும் கொலை குறித்து சம்பவ இடத்தில் நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முரளி ரம்பா விசாரணை நடத்தி வருகிறார்.
கொள்ளைக் கும்பல் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பேசியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தில் பணியாளர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இதே கோடநாடு பங்களாவில் மூன்று மாதங்களுக்கு முன்பு முகமூடி கொள்ளையர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.