தமிழ்நாடு

உயிருக்குப் போராடிய பெண்ணுக்கு மருத்துவமனையில் நேர்ந்த அவலம் : அதிர்ச்சி வீடியோ

webteam

வேலூரில் விஷம் அருந்திய நிலையில் உயிருக்குப் போராடிய பெண் சிகிச்சை பெறும் போது, மருத்துவமனையில் காவலாளியே குளுக்கோஸ் இணைப்பை மாற்றிய அவலம் நடைபெற்றது.

வேலூர் மாவட்டம் வாலாஜாப்பேட்டையில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான புறநோயாளிகளும், உட்பிரிவு நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தின் அரசு தலைமை மருத்துவமனை என்பதால் விபத்து, பாம்புகடி, விஷம் குடித்தல், தற்கொலை முயற்சி போன்ற அவசர நோயாளிகளும் இங்குதான் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இந்த மருத்துவமனையில் நோயாளிகளுக்கு முறையாக சிகிச்சை அளிக்கப்படுவதில்லை. 

போதுமான மருத்துவர்களும் இல்லை. இருக்கும் மருத்துவர்களும் உரிய நேரத்தில் பணிக்கு வருவதில்லை. அப்படியே மருத்துவர்களும் இருந்தாலும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் அலட்சியம் காட்டுவதாக, அங்கு வந்து சிகிச்சை பெறும் நோயாளிகள் குற்றம்சாட்டியுள்ளனர். பல நேரங்களில் நோயாளிகளுக்கு மருத்துவமனையில் பணிபுரியும் காவலாளி தான் குளுக்கோஸ் மாற்றுவது, மருந்துகள் வழங்குவது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார். மருத்துவம் சார்ந்த அறிவு இல்லாத காவலாளியின் இந்தச் செயலால் நோயாளிகள் பலர் அச்சத்துடன் சிகிச்சை பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தின் தலைமை அரசு மருத்துவமனை என்பதால், இங்கு 60க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். 

ஆனால் அவர்கள் பெரும்பாலான நேரங்களில் ஓய்வு அறையில் மட்டுமே இருப்பதாகவும், அரட்டை அடித்துக்கொண்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காமல் இருப்பதாகவும் நோயாளிகள் கூறுகின்றனர். அதுமட்டுமின்றி காவலாளி ஏன் சிகிச்சை அளிக்கின்றார்? “நீங்கள் கொஞ்சம் சிகிச்சை அளியுங்களேன்” என்று கேட்கும் ஏழை நோயாளிகளை, “அப்படி உயர்தர சிகிச்சை வேண்டுமென்றால் தனியார் மருத்துவமனைக்கு செல்லுங்களேன்” என செவிலியர்கள் கோவலமாக பேசுவதாகவும் நோயாளிகள் வேதனை தெரிவிக்கின்றனர். போதிய வசதி இல்லாத காரணத்தால் தான் தாங்கள் அரசு மருத்துவமனைக்கு வருவதாகவும், ஆனால் இங்கே இதுபோன்ற அவலநிலை உள்ளதாகவும் இது தொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வருத்தத்துடன் கோரிக்கை வைக்கின்றனர். 

இந்நிலையில் விஷம் அருந்தியதால் உயிருக்கு போராடும் நிலையில் பெண் ஒருவர் இந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு செவிலியர்கள் குளுக்கோஸ் மாற்றாமல் காவலாளியே அதை செய்துள்ளார்.

இதுதொடர்பான காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த அவலம் தொடர்பாக நோயாளிகள், அவர்களின் உறவினர்கள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடம் இருந்து கண்டனங்கள் எழுந்துள்ளது. இந்நிலையில் காவலாளி குளுக்கோஸ் மாற்றியது தொடர்பாக மருத்துவத்துறை இணை இயக்குனர் விசாரணை மேற்க்கொண்டு வருகிறார். 

(தகவல்கள் : குமரவேல், புதிய தலைமுறை செய்தியாளர், வேலூர்)