சிஏஏவுக்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்று வந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றிற்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் கடந்த மாதம் 14-ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். சிறுவர்கள், பெண்கள் உள்ளிட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக போராட்டக் குழு அறிவித்துள்ளது. அதனைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
இதேபோன்று, மதுரை மேலூரில் கடந்த 11 நாட்களாக நடைபெற்று வந்த போராட்டத்தை ஒத்திவைப்பதாக அனைத்து ஜமாத் அமைப்புகள் தெரிவித்தனர். திருப்பத்தூர், திருவாரூர், மதுரை ஆகிய பகுதிகளிலும் போராட்டங்கள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
முன்னதாக, கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கிருமி நாசினி மூலம் தூய்மைப்படுத்த வேண்டும், ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள், கோடைக்காலப் பயிற்சி வகுப்புகளை மார்ச் 31 வரை நடத்தக்கூடாது, மாநாடுகள், கருத்தரங்குகள், வணிகக் கண்காட்சிகள், கலாசார நிகழ்வுகளுக்கு மார்ச் 31 வரை அனுமதி வழங்கக்கூடாது உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை தமிழக அரசு பிறப்பித்தது.