அண்ணாமலை
அண்ணாமலை pt web
தமிழ்நாடு

"2 பெரிய கட்சிகளுக்கு மத்தியில் செயல்படுவது எவ்வளவுகஷ்டம் என்பதை கமலின் முடிவு காட்டுகிறது"-அண்ணாமலை

webteam

செய்தியாளர்: விக்னேஷ்முத்து

கோவையிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்த தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "தமிழகத்தில் தனித்து அரசியல் கட்சி நடத்துவது எவ்வளவு சிரமம் என்பதும், தமிழகத்தில் உள்ள இரண்டு பெரிய கட்சிகளுக்கும் மத்தியில் செயல்படுவது எவ்வளவு கஷ்டம் என்பதை கமலஹாசன், திமுக கூட்டணியில் இணைந்திருப்பது வெளிக்காட்டுகிறது.

Kamal Haasan

2021 சட்டமன்றத் தேர்தலில் யாரை எதிர்த்து கமல்ஹாசன் பிரச்சாரம் செய்தாரோ இன்று அவர்களுடன் கூட்டணிக்கு சென்றுள்ளார். இன்று அவர்கள் ஓட்டு போட்டு தான் கமல்ஹாசன் எம்.பியாக தேர்வாகப் போகிறார்.

ஜாபர் சாதிக் கைது தொடர்பாக தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு இரண்டு பக்க விரிவாக அறிக்கை வெளியிட்டிருக்கிறது. எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இன்றைய செய்தித் தாள்களில் அவர் திரைப்பட தயாரிப்பாளர் எனவும், போதைப் பொருள் கடத்தியவர் என்றும் போடப்பட்டிருக்கிறது. ஆனால், எங்கேயும் அவர் சார்ந்த கட்சி பெயரை போடவில்லை. இதுவே பாஜக-வை சேர்ந்த நிர்வாகி கீழே விழுந்தால் கூட பாஜக என்ற பெயர் பெரிய எழுத்தில் போடப்பட்டிருக்கும்.

அருண் கோயல்

தேர்தல் ஆணைய அதிகாரிகள் ராஜினாமா செய்வது புதிதல்ல. அருண் கோயல்-க்கு வருகிற 2027 ஆம் ஆண்டு வரை பதவிக்காலம் இருந்தது. அடுத்த தலைமை தேர்தல் அதிகாரியாக கூட அவர் வர வாய்ப்பு இருந்தது. ராஜினாமா தொடர்பாக அருண் கோயல் எந்தவித கருத்தையும் தெரிவிக்காத போது நான் ஒரு கருத்தை தெரிவிப்பது சரியல்ல. ஒரு பக்கம் ஆளும் கட்சியினர் அழுத்தம் கொடுத்தார்கள் என்றும் மறுபக்கம் எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் அழுத்தம் கொடுத்தார்கள் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.

அவர் தனது ராஜினமா தொடர்பாக அதிகாரப்பூர்வமான கருத்தை தெரிவிக்காத வரை யாராக இருந்தாலும் கருத்து தெரிவிக்க முடியாது. இதுதான் என் கருத்து.

கூட்டணி தொடர்பாக இரண்டு மூன்று நாட்கள் பொறுத்திருங்கள் சரியான நேரத்தில் அது தொடர்பாக விரிவாக பேசுகிறேன்" என்றார்.