தமிழ்நாடு

அண்ணாமலை படித்தவர்; முரசொலி குறித்து விமர்சித்திருக்க வாய்ப்பில்லை - வி.பி துரைசாமி

Sinekadhara

தங்கள் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தாக்குதல் நடத்தியதாக காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் பாஜகவினர் புகார் அளித்துள்ளனர்.

அம்பேத்கர் பிறந்தநாளான ஏப்ரல் 14ஆம் தேதி கோயம்பேட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு அரசியல் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. பாஜகவினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் கற்களை வீசித் தாக்கிக் கொண்டனர். இதில்‌‌ பாஜகவைச் சேர்ந்த மூன்று பேரின் மண்டை உடைந்தது. மோதலை தடுக்கச் சென்ற இரண்டு காவலர்கள் காயமடைந்தனர். அம்பேத்கர் சிலை அருகே கட்சிக் கொடியை நடுவது தொடர்பாக இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில், தங்கள் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தாக்குதல் நடத்தியதாக காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் பாஜகவினர் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து பேசிய அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கல்லெறிந்ததில் 4 பேர் காயமடைந்ததாகவும், தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் உறுதி அளித்துள்ளதாகவும் தெரிவித்தார். தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு குறித்து சட்டமன்றத்தில் பாஜக கேள்வி எழுப்பும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

முரசொலி நாளிதழ் குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்திருக்க வாய்ப்பில்லை என்றும், அவர் படித்தவர், தரமானவர் என்பதால் தரக்குறைவாக விமர்சனம் செய்திருக்க மாட்டார் எனவும் வி.பி.துரைசாமி தெரிவித்தார்.