பயன்படுத்தாத வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்றுவது வழக்கம்தான் என்று தேர்தல் அலுவலர் விளக்கம் அளித்துள்ளார்.
கோவையில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேனிக்கு மாற்றப்பட்டன. இதுகுறித்து புகார் அளித்த திமுக கூட்டணி கட்சிகள் தேனி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். திமுக கூட்டணி கட்சியினரின் போராட்டத்தை தொடர்ந்து மாவட்ட தேர்தல் அதிகாரி அங்கு வந்தார்.
இதுகுறித்து பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, “வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேனிக்கு மாற்றப்பட்ட விவகாரத்தில் ஆட்சியர்கள் மீது நடவடிக்கை தேவை; 70க்கும் மேற்பட்ட இயந்திரங்கள் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறையின் சாவியை உயர்நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்” என்று கூறினார்.
கோவை வருவாய் அலுவலர் சவுந்தர்ராஜன் புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில், “வாக்குப்பதிவு ஆகாத 50 இயந்திரங்களே தேனிக்கு மாற்றம்; தேர்தல் ஆணையத்தில் இருந்து வந்த கடிதத்தின் அடிப்படையிலேயே இயந்திரங்கள் மாற்றம் செய்யப்பட்டன. பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டராங் ரூம் எனப்படும் அறையில் பாதுகாப்பாக உள்ளன” என்று கூறினார்.
அதேபோல், பயன்படுத்தப்படாத வாக்குப்பதிவு இயந்திரங்களை இடமாற்றம் செய்வது வழக்கமான நடைமுறைதான் என்றும் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு கூறினார். மேலும், 20 பயன்படுத்தப்படாத விவிபெட் இயந்திரங்கள் ஈரோட்டுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மறுத்தேர்தல் குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகாத நிலையில், தேனி தொகுதிக்கு கோயம்புத்தூரில் மாற்றப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.