தமிழ்நாடு

பணத்திற்காக ரத்தான வேலூர் தேர்தல்... ஆனாலும் தொடரும் பண விநியோகம்..?

Rasus

வேலூர் மக்களவை தொகுதியில் வெளிப்படையாகவே வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

வேலூர் மக்களவை தொகுதிக்கு ஆகஸ்ட் 5-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலையுடன் ஓய்கிறது. இதனால் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக ஆதரவு வேட்பாளரான ஏ.சி.சண்முகம் மற்றும் திமுக வேட்பாளரான கதிர் ஆனந்த் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில் வேலூர் மக்களவை தொகுதியில் வெளிப்படையாகவே வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். தேர்தல் அதிகாரிகளின் கண்காணிப்பையும் பொருட்படுத்தாமல் பணப்பட்டுவாடா நடைபெறுவதாக கூறப்படுகிறது. புதன்கிழமை மதியத்தில் இருந்து தொடங்கிய பணப்பட்டுவாடா தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. வியாழக்கிமை காலை 7 மணிக்கே தொடங்கிய பண விநியோகம், இரவு 8 மணி வரை நீடித்ததாகவும் கூறப்படுகிறது. 

வாக்காளர்களுக்கு ஒரு வாக்குக்கு ரூ.200 முதல் ரூ.300 வரை பணம் கொடுக்கப்படுவதாக தெரிகிறது. யாருக்கெல்லாம் பணம் கொடுத்தோம் என்பதை அரசியல் கட்சிகள் குறித்து வைத்துக் கொண்டு, கொடுக்காத பேருக்கு பணம் கொடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. வாக்காளர்கள் வீட்டை தட்டி தட்டி பணம் கொடுக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கெனவே பணப்பட்டுவாடா புகாரில் தான் வேலூர் மக்களவை தேர்தல் ரத்து செய்யப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது.