செய்தியாளர் ராஜ்குமார்
தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்வதற்கான பணிகள் நடந்து வருகிறது. இதுதொடர்பாக அனைத்து கட்சியினரும் வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை புரசைவாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இ-சேவை மையம் இருக்கிறது. இந்த வளாகத்தில் 50-க்கும் மேற்பட்ட வாக்காளர்களின் அடையாள அட்டைகள் குப்பையில் கொட்டப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவை துறைமுகம் தொகுதியை சேர்ந்த வாக்காளர்களின் அடையாள அட்டைகள் என்பது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்தி ஒளிபரப்பான நிலையில் வட்டாட்சியர் அகிலா நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் ஊழியர்களிடம் விசாரணை செய்ததில், இ-சேவை மையத்தில் சுத்தம் செய்தபோது முறையாக கையாளாமல் இருந்த பழைய வாக்காளர் அட்டைகளை கொட்டி இருப்பதாகவும், இதில் சில அட்டைகளில் பிழை உள்ளவை என்றும் தகவல் தெரிவித்தார்.
மேலும் வாக்காளர் அட்டை விண்ணப்பம், திருத்தம் செய்யும் மக்களுக்கு முறையாக வழங்கி வருவதாகவும், தற்போது குப்பையில் போடப்பட்டு இருப்பதை ஊழியர்கள் மூலம் சரிபார்த்து அகற்றப்பட்டதாகவும் தகவல் தெரிவித்துள்ளார்.