தமிழ்நாடு

சென்னை: மொத்தமுள்ள 16 தொகுதிகளில் அதிக வாக்குப்பதிவு வடசென்னை தொகுதிகளில்தான்!

Sinekadhara

தமிழகத்திலேயே சென்னை மாவட்டத்தில் தான் மிகக் குறைந்த அளவு வாக்குகள் பதிவாகியுள்ளன. 59 புள்ளி 06 சதவீத வாக்குகள் பதிவானதில், சென்னையின் "டாப் 5" பட்டியலில் வடசென்னையைச் சேர்ந்த தொகுதிகளே இடம்பெற்றுள்ளன.

சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளில் மொத்தம் 40 லட்சத்து 57 ஆயிரத்து 360 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் சுமார் 24 லட்சம் பேர் அதாவது 59 புள்ளி 06 சதவீதம் பேரே தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர். இதன்மூலம் மாநிலத்திலேயே மிகக் குறைந்தபட்ச வாக்குகள் பதிவான மாவட்டமாக சென்னை உள்ளது. அதேசமயம் சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் அதிகபட்ச வாக்குகள் பதிவான முதல் 5 இடங்களிலும் வடசென்னையை சேர்ந்த தொகுதிகளே இடம்பெற்றுள்ளன.

அதிகபட்சமாக ஆர்.கே.நகர் தொகுதியில் 66 புள்ளி 57 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. பெரம்பூரில் 62 புள்ளி 63 சதவீதமும், ராயபுரத்தில் 62 புள்ளி 31 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன. திரு.வி.க.நகர் தொகுதியில் 60 புள்ளி 61 சதவீத வாக்குகளும், கொளத்தூர் தொகுதியில் 60 புள்ளி 52 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. சென்னை மாவட்டத்திலேயே மிகக் குறைந்தபட்ச வாக்குகள் பதிவான தொகுதியாக வில்லிவாக்கம் உள்ளது. அங்கு 55 புள்ளி 52 சதவீத வாக்குகளே பதிவாகியுள்ளன.