மதுரையில் கொரோனா பொதுமுடக்கம் காரணமாக மீட்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணிற்கு முகாமில் வைத்து வளைகாப்பு விழா நடத்தி நெகிழ்ச்சியை ஏற்படுத்திய தன்னார்வலர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
கொரோனா பொதுமுடக்கம் காரணமாக மதுரையில் பல்வேறு பகுதிகளில் சாலையோரம் வசிப்பவர்கள், ஆதரவற்றோர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என 650 பேர் மீட்கப்பட்டு 3 தற்காலிக காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட தேவைகளை மாவட்ட நிர்வாகத்தின் உதவியோடு தன்னார்வலர்கள் பூர்த்தி செய்து வருகின்றனர்.
காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு அவர்களின் மன அழுத்தத்தை போக்க கவுன்சிலிங், விளையாட்டு போட்டி உள்ளிட்டவை நடத்தப்படுகின்றன. மேலும், தனித்திறன் குறித்து அறிந்து அதற்கு ஏற்ப அவர்களை தயார்படுத்துவது, அவர்களை அவர்களது குடும்பங்களுடன் இணைத்து வைப்பது, உணவகங்கள் உள்ளிட்ட பல இடங்களில் பணிபுரிவதற்கான வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுப்பதையும் தன்னார்வலர்கள் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் காப்பகத்தில் உள்ள 7 மாத கர்ப்பிணி பெண்ணிற்கு வளைகாப்பு விழா நடத்தப்பட்டது. இந்த வளைகாப்பு விழா தனி மனித இடைவெளியை கடைபிடித்து நடத்தப்பட்டது. தன்னார்வலர்கள் மட்டுமல்லாமல் காப்பகத்தில் உள்ள அனைவரும் கர்ப்பிணி பெண்ணிற்கு வளையல் அணிவித்து ஆசிர்வாதம் செய்தனர். ஆதரவற்ற பெண்ணிற்கு தாய்மை உள்ளத்தோடு வளைகாப்பு விழா நடத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.