தமிழ்நாடு

சசிகலாவை வரவேற்க தயாராகும் ஆதரவாளர்கள்... கொடி, தோரணம், பேனர் அமைக்கும் பணிகள் தீவிரம்!

kaleelrahman

தமிழக - கர்நாடக எல்லையில் சசிகலாவை வரவேற்க தொண்டர்கள் தயாராகி வருகின்றனர்

கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் பகுதியான தேவனஹள்ளியிலிருந்து நாளை காலை தமிழகம் வரும் சசிகலாவுக்கு மாநில எல்லையான ஓசூர் பகுதியில் சிறப்பான வரவேற்பு கொடுக்க அமமுக தொண்டர்கள் தீவிர ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து விடுதலையான சசிகலா கொரோனா தொற்று காரணமாக பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அதனைத் தொடர்ந்து பூரண குணமடைந்த அவர் தற்போது பெங்களூர் புறநகர் பகுதியான தேவனஹள்ளி தனியார் விடுதியில் ஓய்வு எடுத்து வருகிறார். இந்த நிலையில் அவர் நாளை காலை தமிழகம் வருகிறார்.

நான்கு ஆண்டுகளுக்குப் பின்பு தமிழகம் வரும் சசிகலாவுக்கு ஓசூரில் இருந்து சென்னை வரை சிறப்பான வரவேற்பு அளிக்க அமமுக தொண்டர்கள் தயாராகி வருகின்றனர். தமிழக எல்லையான அத்திப்பள்ளி மற்றும் ஓசூர் நகரத்தில் மூன்று இடங்கள் என மொத்தம் ஒசூரில் நான்கு இடங்களில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மாநில எல்லையான அத்திப்பள்ளியில் இரண்டு ஏக்கர் நிலம் தயார் செய்யப்பட்டு அங்கு கட்-அவுட் மற்றும் கொடி தோரணங்கள் கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

ஓசூரில் மூன்று இடங்களில் கட்-அவுட் மற்றும் தோரணங்கள் பிளக்ஸ் பேனர்கள் சுவரொட்டிகள் என வரவேற்பு களைகட்டி வருகிறது. ஓசூரில் இருந்து சென்னை வரை செல்லும் சசிகலாவுக்கு கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் சென்னை ஆகிய மாவட்டங்களை 5 மண்டலங்களாக பிரித்து வரவேற்பு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த 5 மண்டலங்களிலும் தமிழகம் முழுவதும் உள்ள தொண்டர்கள் குவிவார்கள் எனவும் அமமுகவினர் தகவல் தெரிவிக்கிறார்கள்.

அதேபோல வழக்கறிஞர்கள் பிரிவு சார்பிலும் தமிழகம் முழுவதும் உள்ள வழக்கறிஞர் 500க்கும் மேற்பட்டோர் மாநில எல்லை மற்றும் சசிகலா செல்லுமிடங்களில் வழி நெடுக வரவேற்பு கொடுக்க திட்டமிட்டு அதற்கான பணிகளையும் செய்து வருகின்றனர். இதற்கிடையே காவல்துறையிடம் அனுமதி பெற்ற உரிய இடங்களில் பேனர்கள் அமைக்க வேண்டும் என்றும், வரவேற்பு அளிக்க வேண்டுமென்றும் காவல்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது