டிக் டாக் செயலியில் துப்பாக்கி மற்றும் பட்டா கத்தியுடன் வீடியோ வெளியிட்ட இளைஞர்களை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் லட்சுமி தெரு பகுதியை சேர்ந்த கல்லூரியில் பயிலும் இளைஞர்கள் சிலர் டிக் டாக் செயலி மூலம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் புல்லட்டில் வரும் இளைஞர் ஒருவரை மூன்று பேர் கொண்ட கும்பல் பட்டா கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் தாக்க வருவது போலவும், அதைக்கண்ட பைக்கில் வந்த இளைஞர் தனது வாகனத்தில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து ஒருவரை சுட்டு கொல்வது போலவும், அதனை கண்ட மற்றவர்கள் தப்பி செல்வதாகவும் காட்சிகள் அமைந்துள்ளது.
இந்த காட்சிகள் தங்களை ரவுடிகளாக சித்தரித்து கொள்ளவும், பொது மக்களை அச்சுறுத்தும் விதமாகவும் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இது வைரலாக பரவி வருகிறது. இது குறித்து ராசிபுரம் காவல் துறையினர் அந்த வீடியோக்களை வெளியிட்டது யார் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.