தமிழ்நாடு

திடீரென உடைந்த ஏரிக்கரை மதகு - பெரும் அசம்பாவிதத்தை தடுத்த இளைஞர்கள்

webteam

விழுப்புரத்தில் திடீரென உடைந்த ஏரிக்கரையின் மதகினை மண் மூட்டைகள் கொண்டு அடைத்து ஊர் இளைஞர்கள் பெரும் அசம்பாவிதத்தை தவிர்த்தனர்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த சத்தியமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள பெரிய ஏரி, சுமார் 200 ஏக்கர் நில பரப்பில் அமைந்துள்ளது. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டுதான் இந்த ஏரி முழு கொள்ளளவை எட்டியது. இதிலிருந்து பாலப்பாடி, சத்தியமங்கலம், சொக்கானந்தல், மணலப்பாடி மற்றும் ஏராளமான கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரத்திற்கும், விவசாய பாசனத்திற்கும் நீர் திறக்கப்படுகிறது. இந்த ஏரி தற்போது பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்நிலையில் நேற்றிரவு ஏரிக்கரையின் மதகு அருகே திடீரென உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியிருக்கிறது. இதனை இன்று அதிகாலை ஏரிக்கரை வழியாக சென்ற அப்பகுதி மக்கள் கண்டுள்ளனர். அவர்கள் உடனே ஊர்மக்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்த ஊர் இளைஞர்கள் மண் மூட்டைகளைக் தயார் செய்து, உடைப்பை விரைந்து அடைத்தனர். பின்னர் தண்ணீர் வெளியேறுவது நின்றது.

இதைத்தொடர்ந்து அரசு அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடைப்பு ஏற்பட்ட பகுதியை பார்வையிட்ட கிராம நிர்வாக அதிகாரி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஜேசிபி இயந்திரங்களை கொண்டு ஏரிக்கரையை பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் மண் மூட்டைகளை கொண்டு தண்ணீர் வெளியேறுவதை தடுத்து, பெரும் அசம்பாவிதத்தை தவிர்த்த இளைஞர்களை அனைவரும் பாராட்டினர்.