கோவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த சரவணக்குமார் என்பவரைக் கைது செய்துள்ள காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். வி.ஹெச்.பி-யின் கோவை வடக்கு மாவட்ட அமைப்பாளரான இவர், யோகா பயிற்சியாளராகவும் உள்ளார். மேலும், லண்டனில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. கடந்த மாதம் 17 ஆம் தேதி கோவை காந்திபுரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகம் மீது அடையாளம் தெரியாத நபர்கள் அதிகாலையில், பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பிச் சென்றனர். இது தொடர்பாக 3 தனிப்படைகளை அமைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சியையும் காவல் துறையினர் வெளியிட்டனர். அதில், சந்தேகிக்கப்படும் நபர்கள், கைக்குட்டையை முகத்தில் கட்டிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகம் மீதான இந்த தாக்குதலில் அங்கிருந்த கார் உள்ளிட்ட வாகனங்கள் சேதமடைந்தன. சிசிடிவி காட்சியை வைத்து குற்றவாளிகளை தேடி வந்த போலீசார் தற்போது ஒருவரைக் கைது செய்துள்ளனர்.