தமிழ்நாடு

ரூ.51 லட்சம் வரி செலுத்தவில்லை: விஷால் நேரில் ஆஜராக சம்மன்

ரூ.51 லட்சம் வரி செலுத்தவில்லை: விஷால் நேரில் ஆஜராக சம்மன்

webteam

தனது நிறுவன பணியாளர்களிடம் பிடித்தம் செய்த வரிப்பணத்தை அரசுக்கு செலுத்தத் தவறியது குறித்து நேரில் விளக்கம் அளிக்க நடிகர் விஷாலுக்கு வருமான வரித்துறை ‌சம்மன் அனுப்பியுள்ளது.

இதுகுறித்து வருமான வரித்துறையின் TDS எனப்படும் வரிப்பிடித்தம் வசூலிப்பு பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது. விஷாலுக்கு சொந்தமான அலுவலகத்தில் வரிப்பணத்தை செலுத்தாதது குறித்து ஆய்வு நடத்தப்பட்டதாக அதில் கூறப்பட்டுள்ளது. விஷால் நிறுவனத்தின் சார்பில் 51 லட்சம் ரூபாய் வரிப்பிடித்தம் செய்யப்பட்டும், அதை அரசுக்கு செலுத்தாதது ஆய்வில் கண்டறியபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆய்வின்போது அலுவலகத்தில் விஷால் மற்றும் கணக்குப் புத்தகங்கள் ஏதும் இல்லை என்றும், அங்கிருந்த நிர்வாகிகள் சிலர் வரிப்பிடித்தம் செய்த தொகையை செலுத்தாததை ஒப்புக் கொண்டதாகவும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. மேலும், அந்த தொகையை இரண்டு அல்லது மூன்று தவணைகளாக செலுத்தி விடுவதாக நிர்வாகிகள் கூறியதாகவும் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, வருகிற வெள்ளிக்கிழமையன்று நேரில் விளக்கம் அளிக்க சம்மன் அளித்து விட்டு அதிகாரிகள் திரும்பியதாக வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.