கிருஷ்ணகிரி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் கொசு உற்பத்திக்குக் காரணமாக இருந்த வீடுகள், கல்லூரிக்கு மாவட்ட நிர்வாகங்கள் அபராதம் விதித்துள்ளன.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அம்பாள் நகர், ஜவகர் குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் கதிரவன், மாவட்ட சுகாதாரத்துறை செயலர், நகராட்சி ஆணையர் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்பகுதியிலுள்ள கால்வாய்களை சுத்தப்படுத்துமாறும், குப்பைகள், முட்புதர்களை அகற்றுமாறும் அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். பின்னர் வீட்டின் சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைத்திருக்க வேண்டும் எனவும் தவறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரித்தார்.
விருதுநகர் அருகே கொசு உற்பத்தியாகக் காரணமாக இருந்த தனியார் பொறியியல் கல்லூரிக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்து ஆமத்தூர் பகுதியிலுள்ள பள்ளி, கல்லூரிகளில் மாவட்ட ஆட்சியர் சிவஞானம் ஆய்வு மேற்கொண்டார். அப்போது தனியார் பொறியியல் கல்லூரியில் கொசு உற்பத்தியாகும் வகையில் தண்ணீர் தேக்கி வைத்திருந்ததால், கல்லூரி நிர்வாகத்திற்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து ஆட்சியர் உத்தரவிட்டார்.